* விராட் கோஹ்லி புதிய சாதனை
பெங்களூரு: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 34 பந்துகளில், 1 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 49 ரன் விளாசினார். இந்த சிக்சருடன் சேர்த்து, ஐபிஎல்லில் கோஹ்லி விளாசிய சிக்சர் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்தது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 184 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருந்த கே.எல்.ராகுலை பின்னுக்கு தள்ளிய விராட் கோஹ்லி, அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய துவக்க வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, 148 சிக்சர்கள் அடித்துள்ளார்.
* காயத்தால் சிஎஸ்கேவில் கலீல் அஹமது விலகல்
சென்னை: கடந்த 14ம் தேதி சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமது, தசைப்பிடிப்பு காரணமாக பாதியில் வெளியேறினார். இந்நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது தொடைப் பகுதியில் தசையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, அடுத்து வரும் போட்டிகளில் கலீல் அஹமது ஆடமாட்டார் என கூறப்பட்டுள்ளது. எனவே மாற்று வீரரை சேர்க்கும் முயற்சியில் சிஎஸ்கே அணி இறங்கி உள்ளது.
* மெஸ்ஸி மீது மோசடி வழக்கு
ரொசாரியோ: அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (38), தற்போது இன்டர் மிலன் அணிக்காக ஆடி வருகிறார். மெஸ்ஸி மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டி மியாமியை சேர்ந்த விட் மியூசிக் குழுமம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்தாண்டு காட்சி போட்டி ஒன்றில் ஆடுவதாக கூறி, ரூ. 56 கோடி பெற்றுக்கொண்டு ஆட வராமல் ஏமாற்றி விட்டதாகவும், அதனால், தங்களுக்கு பெரியளவில் இழப்பு ஏற்பட்டு விட்டதாகவும், அந்த நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக, மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா கால்பந்து சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கவில்லை.
