வேலூர், ஏப்.14: காட்பாடியில் காரில் கொண்டு சென்ற ரூ.65 ஆயிரத்து 200 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி காட்பாடி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் 24 மணி நேரம் சுழற்சி அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி-வள்ளிமலை சாலை பகுதியில் குடியாத்தம் துணை பிடிஓ ஏழுமலை தலைமையிலான பறக்கும் படை குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரை காட்பாடி அசோக் நகரைச் சேர்ந்த அல்தோஸ் மேத்யூ என்பவர் ஓட்டி வந்தார். காரை சோதனையிட்ட போது, காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.65 ஆயிரத்து 200 பணம் இருந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அதை காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
