ஒடுகத்தூர், ஏப்.12: ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் பயிரிடப்பட்டு இருந்த விளை நிலங்களை காட்டெருமைகள் கூட்டம் சேதப்படுத்துவதால் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காடுகளும், மலைகளும் அமைந்துள்ளது. இங்கு வனப்பகுதிகளை ஒட்டியவாறு மேலரசம்பட்டு, தீர்த்தம், பங்களாமேடு, கொட்டாவூர், வண்ணந்தாங்கல், கத்தாரிகுப்பம், கெங்கசாணிகுப்பம், பொம்மன்சந்து, பின்னத்துரை, ஆசனாம்பட்டு, தென்புதூர், அரிமலை என சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
அதேபோல், 5 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் விளை நிலங்களும் காடுகளை ஒட்டியவாறே அமைந்துள்ளது. தற்போது இந்த விவசாய நிலங்களில் கோடைகால பயிர்களான நெல், கேழ்வரகு, கத்தரி, தக்காளி, மாட்டு தீவனம், கரும்பு, வாழை போன்றவைகள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை வனப்பகுதியில் இருந்து வரும் காட்டெருமைகள் கூட்டம் சேதப்படுத்தி விட்டு செல்கிறது. இந்த காட்டெருமைகள் கூட்டம் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் வனத்தை விட்டு அதன் அருகே உள்ள விளை நிலங்களில் புகுந்து விடுகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் தண்ணீர் இல்லாமலோ அல்லது உணவு பற்றாகுறையாலோ வன விலங்குகள் அதிகளவில் குடியிருப்பு பகுதிகளை நாடி வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள், மான்கள், பன்றிகள் தான் அதிக அளவில் விவசாய நிலங்களை சேதப்படுத்துகிறது. இதனால் நாங்கள் பெரிதளவு பாதிக்கப்படுகிறோம். நேற்று அதிகாலை கூட காட்டெருமைகள் கூட்டம் விளை நிலங்களில் புகுந்து கேழ்வரகு, மாட்டு தீவனப்பயிர், நெல் போன்றவற்றை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. எனவே வன விலங்குகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் மனுக்கள் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றனர்.
