×

கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் நடந்தது வேலூர் உள்பட 5 தொகுதிகளுக்கு

வேலூர், ஏப்.14: வேலூர் உள்பட 5 தொகுதிகளுக்கு வாக்குச்சாவடிகளுக்கு கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு வேட்பாளர்கள் முன்னிலையில் நடந்தது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு 9 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய 5 தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேடு இயந்திரம் ஆகியவை தொகுதி வாரியாக சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு எந்தெந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது என்று கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நேற்று நடந்தது. வேலூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், தேர்தல் பொது பார்வையாளர் யுகல் கிஷோர் பண்ட் ஆகியோர் தலைமையில், வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

அதேபோல், காட்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாறன், மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியன், பொது பார்வையாளர் மன் சுக்லா ஆகியோர் தலைமையில், வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும். வரும் 22ம் தேதி பிற்பகலுக்கு மேல், வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore ,Tamil Nadu Assembly ,
× RELATED காரில் கொண்டு வந்த ரூ.65 ஆயிரம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிரடி