சென்னை, ஏப்.14: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மஹாராஷ்டிர மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை நடத்தியதில், அதிலிருந்த நபரிடம் கை துப்பாக்கி இருப்பது தெரிந்தது.
இதனால், அவரை பிடித்து பாலுசெட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து, போலீசார் நடத்திய விசாரணையில், கல்பாக்கம் பகுதியில் வசிக்கும் சிண்டே விக்காஸ் நந்தகுமார் (42) என்பதும், இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதும் தெரிய வந்தது. தற்போது கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை தீயணைப்பு பிரிவில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வரும் இவர், பெங்களூருவில் உள்ள தனது உறவினரை பார்த்துவிட்டு கல்பாக்கம் சென்றதும், தான் வைத்திருந்த கைத் துப்பாக்கியின் உரிமம் 11.6.2022 முதல் 10.6.2025 வரை உள்ளதும், கடந்த 10 மாத காலமாக உரிமம் பெறாமல் கைத் துப்பாக்கியை பயன்படுத்தியதும் தெரியவந்தது. அவரிடமிருந்து உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த கைத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான சிண்டே விக்காஸ் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
