×

டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி

சென்னை: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 18வது போட்டி சென்னையில் நேற்று நடந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, சென்னை அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இருவரும் சேர்ந்து பொறுப்புடன் ஆடி நிதானமாக ரன்களை சேர்த்தனர். 6.2 ஓவரில் அணியின் ஸ்கோர் 62 ஆக இருந்தபோது, அக்சர் படேல் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் (18 பந்து, 15 ரன்) ஆட்டமிழந்தார்.

அதையடுத்து சஞ்சு சாம்சனுடன் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே இணை சேர்ந்தார். கடந்த 3 போட்டிகளில் சரிவர ஆடாத சஞ்சு சாம்சன், நேற்றைய போட்டியில் அட்டகாசமாக ஆடி ரன்களை குவித்தார். 26 பந்துகளில் அவர் அரை சதம் அடித்தார். சஞ்சு, ஆயுஷ் தொடர்ந்து சிறப்பாக ஆடியதால், 64 பந்துகளில் சென்னை அணி, 100 ரன்னை எட்டியது. ஆயுஷ் மாத்ரேவும், 27 பந்துகளில் அரை சதம் எட்டினார். நடராஜன் வீசிய 18வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே (36 பந்து, 59 ரன்) ரிடையர்ட் அவுட்டானார். அதே ஓவரில் சஞ்சு சாம்சன், நடப்பு தொடரின் முதல் சதத்தை விளாசி கரவொலி பெற்றார். 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

சஞ்சு சாம்சன் (56 பந்து, 4 சிக்சர், 15 பவுண்டரி, 115 ரன்), சிவம் தூபே (20 ரன்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினார். 213 ரன் இலக்கை துரத்திய டெல்லி அணி 20 ஓவரில் 10 விக்கெட்டை பறிகொடுத்து 189 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 60 ரன், நிசாங்கா 41 ரன் எடுத்தனர். சென்னை பந்துவீச்சில் ஓவர்டன் 4 விக்கெட் எடுத்து அசத்தினார். கம்போஜ் 3 விக்கெட், அகமத், குர்ஜப்நீத் சிங், நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

* ஐபிஎல்லில் முதல் சதம் சாம்சன் கலக்கல் சாதனை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறந்த பேட்ஸ்மேன் தேவை என்ற நோக்கில், ராஜஸ்தான் அணியிடம் இருந்து கேட்டு பெறப்பட்ட சஞ்சு சாம்சன், கடந்த 3 போட்டிகளில் ரன் எடுக்காமல் சொதப்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சஞ்சு, 52 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் அரங்கேற்றினார்.

Tags : Chennai ,Delhi ,Chennai Super Kings ,IPL T20 ,Delhi Capitals ,IPL 19th ,
× RELATED சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக டி20 பஞ்சாப் கிங்ஸ் வெற்றி: ஷ்ரேயாஸ் ஆட்ட நாயகன்