×

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக டி20 பஞ்சாப் கிங்ஸ் வெற்றி: ஷ்ரேயாஸ் ஆட்ட நாயகன்

முல்லன்பூர்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று, பஞ்சாப் கிங்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 17வது போட்டி முல்லன்பூரில் நேற்று நடந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீசியது. அதையடுத்து, சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். துவக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றிய அபிஷேக், ஹெட், பவர்பிளே ஓவர்களில் 105 ரன்கள் விளாசினர்.

இந்த இணையை பிரிக்க முடியாமல் பஞ்சாப் வீரர்கள் திணறினர். சன்சைர்ஸ், 120 ரன்கள் குவித்திருந்த நிலையில், 9வது ஓவரை வீசிய சஷாங்க் சிங், அபிஷேக் சர்மாவை (28 பந்து, 8 சிக்சர், 5 பவுண்டரி, 74 ரன்) ஆட்டமிழக்கச் செய்தார். அதே ஓவரில் டிராவிஸ் ஹெட் (23 பந்து, 1 சிக்சர், 5 பவுண்டரி, 38 ரன்), விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த கேப்டன் இஷான் கிஷண், ஹென்றிச் கிளாசன் இணை சிறப்பாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த நிலையில், இஷான் கிஷண் (17 பந்து, 27 ரன்) அவுட்டானார். 17வது ஓவரில், அனிகேத் சர்மா (18 ரன்) ரன் அவுட்டாகி வெளியேறினார். 17.4 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களை எட்டியது.

கடைசி கட்டத்தில் 19வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் நேர்த்தியாக பந்து வீசி சலீல் அரோராவை (9 ரன்) வீழ்த்தினார். பார்ட்லெட் வீசிய 20வது ஓவரில் ஹென்றிச் கிளாசன் (39 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. அதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா களமிறங்கினர். துவக்கம் முதல் அதிரடி ஆட்டம் ஆடிய இருவரும், முதல் விக்கெட்டுக்கு 6.2 ஓவரில் 99 ரன்கள் விளாசிய நிலையில், பிரியன்ஸ் ஆர்யா (20 பந்து, 5 சிக்சர், 5 பவுண்டரி, 57 ரன்) ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்நது, சிவாங் குமார் வீசிய 9வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் (25 பந்து, 4 சிக்சர், 4 பவுண்டரி, 51 ரன்), விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கூப்பர் கனோலி 11 ரன்னில் வீழ்ந்தார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 17வது ஓவரில் நேஹல் வதேரா 14 ரன்னில் அவுட்டானார். இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயரும், சஷாங்க் சிங்கும் இணை சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 18.5 ஓவரில் பஞ்சாப் அணி, 4 விக்கெட் இழந்து 223 ரன் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் 3வது வெற்றியை பதிவு செய்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில், 5 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 69 ரன் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் சிவாங் குமார் 3, ஹர்ஷ் தூபே 1 விக்கெட் எடுத்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகன்.

* பவர் பிளேயில் சதம் சன்ரைசர்ஸ் புது ரகம்: 105 ரன் குவித்து சாதனை
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் நேற்று, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், பவர்பிளே ஓவர்களில் பஞ்சாப் அணி பவுலர்களின் பந்துகளை துவம்சம் செய்து ரன்களை வேட்டையாடினர். பவர்பிளேவில் வீசப்பட்ட 6 ஓவர்களில் இருவரும் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் விளாசினர். இது, நடப்பு ஐபிஎல் தொடரில், பவர்பிளேயில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. பவர்பிளேயில், அபிஷேக் சர்மா, 22 பந்துகளை எதிர்கொண்டு, 7 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்களை குவித்திருந்தார். டிராவிஸ் ஹெட் 15 பந்துகளில் ஒரு சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் விளாசி, பவர்பிளேயில் சதமடிக்க உதவினார். பஞ்சாப் தரப்பில், 3வது ஓவரை வீசிய அர்ஷ்தீப், 5வது ஓவரை வீசிய விஜய்குமார் வைஷாக் தலா 24 ரன்களையும், 6வது ஓவரை வீசிய சேவியர் பார்ட்லெட் 21 ரன்களையும் வாரி வழங்கினர்.

Tags : T20 ,Punjab Kings ,Sunrisers ,Shreyas Atta Man ,Mullanpur ,IPL T20 ,Sunrisers Hyderabad ,IPL 19th series ,
× RELATED மான்டேகார்லோ பைனலில் நம்பர் 1 அல்காரஸ்...