முள் சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள் குறித்தும், அதனை சாப்பிடுவதன் மூலம், நமது உடலுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.
ஆங்கிலத்தில் soursop என அழைக்கப்படும் முள் சீதாப்பழம், பெரிய அளவிலான ஸ்ட்ராபெர்ரி பழம் போன்று உள்ளது. இது ஆப்பிளின் ஒரு வகை என்றும் அழைக்கப்படுகிறது. பழத்தின் வெளிப்புறத்தில், முட்கள் அதிக அளவில் உள்ளன.
இந்தப் பழத்தின் தாயகம் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா என்ற போதிலும், இதன் சுவை, உலகின் அனைத்துப் பகுதி மக்களாலும் விரும்பத்தக்கதாக உள்ளது. முள் சீதாப்பழத்தின் சுவை ஸ்ட்ராபெர்ரி, பைன் ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் பழங்களின் கலவையாக உள்ளது.
முள் சீதாப்பழம், Annona muricata என்ற சீதாப்பழக் குடும்பத்தை சேர்ந்தது. இது உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கிறது.
முள் சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள்
1 கப் (225 கிராம்) அளவு முள் சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள்
கலோரிகள் : 148
கொழுப்பு : 10.7 கிராம்
சோடியம் : 131.75 மில்லிகிராம்
கார்போஹைட்ரேட்ஸ் : 137.9 கிராம்
நார்ச்சத்து : 17.4 கிராம்
சர்க்கரை : 130.5 கிராம்
புரதம் : 12.3 கிராம்
வைட்டமின் சி : 46.4 மில்லிகிராம்
பொட்டாசியம் : 626 மில்லிகிராம்.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்
முள் சீதாப்பழத்தில் அதிகளவில் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்கள் உள்ளன. ஒரு கப் முள் சீத்தாப்பழம் கூழில், 46.4 மில்லிகிராம் அளவிற்கு வைட்டமின் சி உள்ளது. நமது நோய் எதிர்ப்புச் சக்தி சிறந்த முறையில் இருக்க நாள் ஒன்றுக்கு, நமக்கு 90 மில்லிகிராம் வைட்டமின் சி தேவைப்படுவதாக, அமெரிக்க உணவுத்துறை தெரிவித்து உள்ளது.
இந்தப் பழக் கூழில் உள்ள 626 மி.கி அளவிலான பொட்டாசியம், ரத்த அழுத்த மாறுபாட்டை ஒழுங்குபடுத்தவும், கடுமையான உடற்பயிற்சியின் போது ஏற்படும் சோர்வை போக்கவும் பயன்படுகிறது.
மருத்துவ பயன்கள் – முள் சீதாப்பழம், கிராவியோலா அல்லது கோனாபானா என்றும் அழைக்கப்படுகிறது.
கிராவியோலா டீ – முள் சீதாப்பழ தாவரத்தின் இலைகளைக் கொண்டு டீ தயாரிக்கப்படுகிறது. இது பாக்டீரியல் மற்றும் வைரல் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்துவதோடு, காய்ச்சல் உள்ளிட்டவைகளை குறைக்கிறது.
Herpes போன்ற பால்வினை நோய்களில் இருந்தும் இது தீர்வு அளிப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். முள் சீதாப்பழத்தின் சாறு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
புற்றுநோய் தடுப்பு சக்தி – 2018-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், முள் சீதாப்பழம் மரத்தின் பட்டை, வேர்கள் மற்றும் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு, புற்றுநோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
அமெரிக்காவின் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் நடத்திய ஆய்வின் முடிவுகளில், முள் சீதாப்பழத்தின் சாறு, புற்றுநோய் செல்களை சிறந்த முறையில் அழிக்கிறது. முள் சீதாப்பழத்தை நாம் பச்சையாகவே சாப்பிட்டு வந்தால் அதிக பலன்கள் கிடைப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தாவரத்தின் இலைகளை கொண்டு டீ செய்து குடித்தும் நல்ல பலன்களை பெறலாம்.
ஜீரண மண்டலத்தை ஊக்குவிக்கிறது. முள் சீதாப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, நமது உடலின் ஜீரண சக்தியை ஊக்குவிப்பதாக உள்ளது. இந்தப் பழத்தின் சாறு, சிறுநீர் பெருக்கி ஆகவும், இரைப்பை குடல் மற்றும் உணவுக்குழாய் பகுதிகளில் சேகரம் ஆகியுள்ள அதிகப்படியான சோடியத்தை அகற்ற உதவுகிறது.
ஆய்வகங்களில், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விலங்குகளில், இந்த பழத்தின் சாறு, கேஸ்ட்ரிக் அல்சரை குணப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது.மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒப்பிடும்போது, முள் சீதாப்பழத்தில், ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இது நமது உடலில் பழுதடைந்த செல்களை சரிசெய்வதோடு மட்டுமல்லாது, நமது உடலில் தேவையில்லாமல் ஏற்படும் வீக்கங்களை தடுக்கவும் உதவுகிறது.
தொகுப்பு: தவநிதி
