நன்றி குங்குமம் டாக்டர்
பச்சைப் பட்டாணி என்பது உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சத்தான பயறு வகை உணவாகும். பாரம்பரிய உணவுகளில் மட்டும்மல்லாமல் சமீபத்தில் ஊட்டச்சத்து ஆராய்ச்சிகளிலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இது ஃபேபேசியே அல்லது லெகுமினோசே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். பச்சைப் பட்டாணியில் புரதம், நார்ச்சத்து வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி- ஆக்சிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இதனால், உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.
ஊட்டச்சத்து மதிப்பு -100 கிராம்
புரதம் – 5.6 கிராம்
நார்சத்து – 5.6 கிராம்
கால்சியம் 25 மி.கி.
இரும்புச்சத்து 1.5 மி.கி.
பொட்டாசியம் 240 மி.கி
(தினசரி பரிந்துரைக்கப்படும் அளவு
அரை கப் – 1 கப் (50-100 கிராம்)
சமீபத்திய ஆய்வுகளின்படி பச்சைப்பட்டாணியின் பலன்கள்:
நீரிழிவு கட்டுப்பாடு
பச்சை பட்டாணியில் காணப்படும் முக்கிய ஊட்டச்சத்து கூறுகளில் ஒன்று ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் ஆகும். இது உடலில் மெதுவாக செரிமானமாகும் ஒருவகை கார்போஹைட்ரேட் ஆகும். இதை, உட்கொள்ளும்போது உணவுக்குப் பிறகு ரத்த சர்க்கரை திடீரென அதிகரிப்பதை குறைக்க முடியும். இதனால் நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவக்கூடும். மேலும் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்களுக்கு உணவாக இருந்து SCFA (short chain fatty acids) ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உருவாக உதவுகிறது. இந்த தன்மையால் உடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.
இதய ஆரோக்கியம்
பச்சைப் பட்டாணியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னிசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன. ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால் கெட்ட கொலஸ்ட்ரால் (எல்.டிஎல்) அளவை குறைக்கும். நல்ல கொலஸ்ட்ரால் (எச்டிஎல்) அதிகரிக்க உதவும். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இதயநோய் மற்றும் பக்கவாதம் அபாயம் குறைய வாய்ப்புகள் நிறைய உள்ளது. வாரம் ஒருமுறை சேர்ப்பதன் மூலம் நல்ல பயன் அளிக்கும்.
புற்றுநோய் தடுப்பு
பச்சைப்பட்டாணியில் உள்ள பயோ ஆக்டிவ் சேர்மங்கள், பாலிபினால்கள், பிளோவனாய்டுகள் மற்றும் சபோனின் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கின்றன. செல்களின் ஆக்ஸிடேட்டிவ் சேதத்தைத் தடுக்கும். சிலவகை புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவக்கூடும்.
உடல் எடை கட்டுப்பாடு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி (மெட்டபாலிக் சிண்ட்ரோம்)
புரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்துகிறது. அதிக உணவு உட்கொள்ளுவதை குறைக்கிறது. பசியின்மை உணர்வு அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறைக்க உதவும். வளர்சிதை மாற்ற நோய்க்குறி அபாயம் குறையும்.
உணவு தொழில் நுட்பத்தில் பட்டாணியின் புதிய பயன்பாடு
உணவு தொழில்நுட்ப ஆய்வுகளில் பச்சைபட்டாணி முக்கியமான தாவர அடிப்படையிலான புரதம் (தாவர அடிப்படையிலான புரதம்) ஆக கருதப்படுகிறது.
பட்டாணி புரதத் தூள் (pea protein powder)
பட்டாணி மாவு
தாவர அடிப்படையிலான இறைச்சிக்கு மாற்றாகும்.
புரோட்டீன் சப்ளிமன்ட்ஸ்
இந்த தயாரிப்புகள் குறிப்பாக சைவ உணவு மற்றும் வீகன் டயட் பின்பற்றுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.பச்சை பட்டாணி சத்துகள் நிறைந்த மற்றும் ஆரோக்கியமான உணவாகும். இதில் உள்ள புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுகள் உடலின் பல்வேறு செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகின்றன. பட்டாணி மற்றும் பயறு வகைகள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டதால் வயிற்று புற்றுநோய் அபாயம் 50 சதவீதம் குறைந்தது கண்டறியப்பட்டது. பட்டாணியில் இருக்கும் குமெஸ்ட்ரோல் வயிற்று புற்றுநோய் அபாயத்தை தடுக்க உதவுகிறது.
தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்
