×

டிஜிபி உள்பட 14 ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் தலைமைச்செயலாளர் முருகானந்தம் திடீர் மாற்றம்: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரும் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு; தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை: தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக தலைமை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடியின் செயலாளரை தலைமை செயலாளராகவும், பாஜ ஆதரவாளரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகவும் நியமித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல், வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. நாம் தமிழர், தவெக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. இதனால் தேர்தல் அறிவிப்பு நேரத்தில் டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நேர்மையான, திறமையான அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமித்துள்ளனர். அவர்கள் தேர்தல் வரை நியாயமாக நடந்து அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்துவார்கள். இதனால் அவர்களை மாற்றிவிட்டு நமக்கு வேண்டியவர்களை நியமிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தார்.

அதன்படி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் சொல்லி, நேர்மையான அதிகாரிகளை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம், நாகப்பட்டினம், விருதுநகர், ஈரோடு, கரூர், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து தமிழக டிஜிபி வெங்கட்ராமன், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், மேற்கு மண்டல ஐஜி சரவணசுந்தரம் ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனராக சஞ்சீவ்குமார், மதுரை கமிஷனராக தீக்‌ஷித், மேற்கு மண்டல ஐஜியாக ரம்யா பாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் திடீரென நேற்று தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக நேற்று இரவு 8 மணிக்கு புதிய தலைமை செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, அவருக்கு முதல்வரின் செயலாளராக பணியாற்றினார். இதனால் அவரை தலைமை செயலாளராக நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி கேட்டுக் கொண்டதால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக பல தகவல்களை இணைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் ஒன்றிய அரசு பணியில் இருந்தபோது துணிச்சலாக சமூகவலைதள பக்கங்களில் ஆர்எஸ்எஸ் கருத்துகளை எழுதி வந்தார். பின்னர் தமிழக அரசு பணிக்குத் திரும்பினார். அவர் ஒன்றிய அரசின் ஆதரவாளராக இருந்ததால் ஆரம்பத்தில் கடலோர காவல்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சில போலீஸ் அதிகாரிகளின் துணையுடன், சைபர் கிரைம் ஏடிஜிபியாக பவர்புல் பதவியில் நியமிக்கப்பட்டார். பின்னர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே துறையில் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்குப் பதில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை போலீஸ் நேரடியாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவதால், அந்த பிரிவின் இயக்குநராக இருந்த டேவிட்சன் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் லஞ்ச ஒழிப்புத்துறையை மட்டும் தனியாக கவனித்திருந்தால் மாற்றப்பட்டிருக்க மாட்டார். ஆயுதப்படையின் ஏடிஜிபியாக உள்ளதால் மாற்றியிருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது 2 முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மேலும், பல போலீஸ் உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம் தமிழக அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் அனைவரும் தலைமைச் செயலாளரின் நேரடி கட்டுப்பாட்டில் வருவார்கள். இதனால் அவரை மாற்றிவிட்டு தங்களுக்கு விருப்பமான அதிகாரிகளை நியமித்து, தாங்கள் நினைத்ததை சாதிக்கலாம் என்று அதிமுக கருதுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags : IAS ,DGP ,Chief Secretary ,Muruganantham ,Anti-Corruption Department ,Election Commission ,Chennai ,Chief Secretary of ,Tamil ,Nadu ,Edappadi ,BJP ,Election Commission… ,
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் குறித்து விஜய்...