×

மாணவனை சாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் செங்கல் சூளை உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருவள்ளூர், ஏப்.7: திருவள்ளூரில், செங்கல் சூளையில் இயற்கை உபாதையை கழித்த பிளஸ் 1 மாணவனை, ஆபாசமாக பேசி கையால் அள்ள வைத்து சாதியின் பெயரைச் சொல்லி காலால் எட்டி உதைத்த வழக்கில், செங்கல் சூளை உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த செல்லத்துர் கிராமத்தில், செங்கல் சூளை நடத்தி வருபவர் கிருஷ்ண ரெட்டி மகன் மணிகண்டன் (35). இவரது, செங்கல் சூளையில் கடந்த 2017ம் ஆண்டு பிளஸ் 1 படித்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் திருமலை (16), மணிகண்டனின் செங்கல் சூளையில் இயற்கை உபாதை கழித்துள்ளார்.

இதனை பார்த்த மணிகண்டன், திருமலையை ஆபாசமாக பேசி தாக்கி, மலத்தை கையால் அள்ள வைத்தும், சாதியின் பெயரைச் சொல்லி திட்டி, காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால், மனமுடைந்த திருமலை, இதுகுறித்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்ததுடன், தற்கொலைக்கும் முயன்றுள்ளார். அதிர்ச்சியான பெற்றோர், மகனை காப்பாற்றியதுடன், இதுகுறித்தும் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த, வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.தமிழ் இனியன் ஆஜாராகி வாதாடினர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஜூலியட் புஷ்பா, குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் குற்றவாளி மணிகண்டக்கு 3 பிரிவின் கீழ் தலா ஒராண்டு வீதம் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக தலா 3 மாதங்கள் வீதம் 9 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : Thiruvallur ,Tiruvallur ,
× RELATED மப்பேடு பகுதியில் ₹1,400 கோடி செலவில் பல்திறன் சரக்கு போக்குவரத்து பூங்கா