- திருவள்ளூர்
- மாவட்ட கலெக்டர்
- எம். பிரதாப்
- பட்டாபிராம் அரசு மாதிரி பள்ளி
- திருவள்ளூர்
- அரசு மாதிரி பள்ளி
- பட்டாபிராம் அண்ணாநகர்
திருவள்ளூர், ஏப்.7: திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அரசு மாதிரி பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான உண்டு உறைவிட இலவச பயிற்சி வகுப்பினை, மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்.
திருவள்ளுர் மாவட்டம், பட்டாபிராம் அண்ணாநகர் பகுதியிலுள்ள அரசு மாதிரி பள்ளியில், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான உண்டு உறைவிட இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தொடங்கி வைத்து, மாணவ – மாணவிகளிடம் கலந்துரையாடி ஊக்கப்படுத்தி, தேவையான புத்தகத் தொகுப்புகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் நீட் தேர்விற்கான சிறப்பு உண்டு உறைவிட பயிற்சி வகுப்பு 6.4.2026 முதல் 1.5.2026 வரை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட 50 அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆவடி பகுதியில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனம் வாயிலாக தரமான நீட் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் திட்டமிட்ட வகுப்புகள், மீளாய்வு அமர்வுகள் மற்றும் மாதிரி தேர்வுகள் முறையாக நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் தங்குவதற்கான பாதுகாப்பான குடியிருப்பு வசதி மற்றும் சத்தான உணவு வழங்கும் ஏற்பாடுகள் அருகிலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தண்டுரையில் செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி மையம் மற்றும் தங்கும் இடத்திற்கு இடையே தினந்தோறும் சென்று வருவதற்கு போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் சீரான மற்றும் ஒழுங்குமுறையான சூழலில் தங்கி பயில தேவையான அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாடவியல் நிபுணர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இணைந்து பயிற்சி மையம் மற்றும் தங்கும் இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் கல்வி முன்னேற்றம் உடல்நலம் மற்றும் ஒழுக்கம் ஆகியவை முறையாக பராமரிக்கப்படும். மாணவர்களுக்கான எழுது பொருட்கள் மற்றும் கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் முன்னேற வேண்டும் என்பது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த நீட் உண்டு உறைவிட பயிற்சி திட்டம் மாணவர்களின் நம்பிக்கையையும், திறனையும் உயர்த்தும். மாணவர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி சிறந்த வெற்றியைப் பெற வேண்டும். இந்த முயற்சி மூலம், அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சிறந்த முடிவுகளை பெற்று, மருத்துவக் கல்வியில் அதிகளவில் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் (பொ) கோ.சுப்பராவ், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) (பொ) லிங்கேஷ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா, தனியார் பயிற்சி நிறுவன பயிற்றுநர்கள், மாணவ – மாணவிகள், பெற்றோர், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
