ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டதால், மீண்டும் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆந்திர-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி தண்ணீரும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும். இந்நிலையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த வருடம் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதில், கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி வரை 2.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியுள்ளது. மீதமுள்ள தண்ணீரை அக்டோபர் மாதத்திற்குள் ஆந்திர அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் திடீரென கண்டலேறுவில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 8 டிஎம்சி தண்ணீருக்கு பதிலாக 3.8 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், 2வது தவணையாக ஜனவரி மாதம் வழங்க வேண்டிய கிருஷ்ணா தண்ணீரை பிப்ரவரி மாதம் 23ம் தேதி வினாடிக்கு 200 கனஅடி வீதமும், மறுநாள் காலை 500 கன அடியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், வினாடிக்கு 2400 கன அடியாக உயர்த்தி திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி இரவு வந்தது. இந்த தண்ணீர் மறுநாள் பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை அடைந்தது.
இந்நிலையில், கண்டலேறு அணையில் கடந்த மார்ச் மாத இறுதியில் திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டது. 4 டிஎம்சி வரவேண்டிய தண்ணீர் 1 டிஎம்சி மட்டுமே வந்தது. கடந்த ஜனவரி மாத இறுதியில் ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்தது. பிப்ரவரி மாத இறுதியில் 2வது தவணையாக தண்ணீர் திறக்கப்பட்டதால் கால்வாய் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது, கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டதால், நிறுத்தப்பட்ட கால்வாய் சீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
