×

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 150 ரவுடிகளிடம் பிரமாண பத்திரம் போலீசார் தொடர் கண்காணிப்பு

வேலூர்: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்றவர்களிடம் இருந்து 446 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சரித்திரபதிவேடு குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி நடந்தது. இவர்கள் பட்டியலிடப்பட்டனர். இவ்வாறு வேலூர் மாவட்டத்தில் பட்டியலிடப்பட்ட 150 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் இருந்து ஆர்டிஓ செந்தில்குமார் முன்னிலையில் பிரமாண பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.

அதில் சட்டமன்ற தேர்தலின் போது எவ்வித குற்றச்செயல்களிலும், சட்டத்துக்கு புறம்பான செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என்று கூறப்பட்டிருந்தது. பிரமாண பத்திரத்தில் கூறப்பட்ட உறுதிமொழியை மீறி, அடாத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

அதேபோல், வேலூர் மாவட்டத்தில் சொந்த பாதுகாப்புக்காக 643 பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இதில் வங்கிகள், கருவூலங்கள், ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்து செல்லும் வாகனங்கள் என நிதித்துறை சார்ந்த பணிகளுக்காக வழங்கப்பட்டது 197 துப்பாக்கிகளாகும். இந்த 197 துப்பாக்கிகளை தவிர மீதமுள்ள 446 துப்பாக்கிகள் காவல்துறையால் பெறப்பட்டுள்ளன.

 

Tags : Vellore ,Tamil Nadu Assembly elections ,
× RELATED செல்போன் பறித்த இரு சிறுவர்கள் உட்பட 4...