வேலூர், ஏப்.5: வேலூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் மிரட்டி செல்போன் பறித்த இரு சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கோவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (19). பொறியியல் பட்டதாரியான இவர் காட்பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி உணவு சாப்பிட கோட்டை பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் அவரை மிரட்டி செல்போன் கேட்டுள்ளனர். சுதாகர் தர மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் அவர் வைத்திருந்த ரூ.1,500 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். அவ்வாறு பறித்த செல்போனையும், பணத்தையும் அங்கே அமர்ந்திருந்த மற்றொருவரிடம் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் சுதாகர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். அதில், வழிப்பறியில் ஈடுபட்டது வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்த சரண் ராஜ் (21), கோகுல்ராஜ் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பணத்தை செலவழித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 2 சிறுவர்களை சென்னையில் உள்ள சிறார் இல்லத்தில் அடைத்தனர்.
