ஈரோடு, ஏப். 5: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகியோர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், ரங்கம்பாளையம், கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 28ம் தேதி தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில், கலந்து கொள்ளாத 285 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில், தேர்தல் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் செயலி பயன்பாடு,வாக்குச்சாவடி செயல்முறைகள், இவிஎம் இயந்திரங்களை கையாளும் முறை, தேர்தல் பணிகளில் துல்லியமான தகவல் பரிமாற்றம் மற்றும் பதிவுகள் பராமரிப்பு ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதேபோன்று, பயிற்சியில் கலந்து கொள்ளாத 263 அலுவலர்களுக்கு கோபிசெட்டிபாளையம் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
