திருப்பூர்,ஏப்.5: திருப்பூரில் காணாமல் போன 15 வயது சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி சிறுமியின் உறவினர்கள் நேற்று வடக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருப்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. இவர் அரசு பள்ளி மாணவியான இவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்து விட்டு அறிவொளி நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி முதல் அந்த சிறுமியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் அந்த சிறுமி அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (23)என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் 2 நாட்களாகியும் சிறுமியை கண்டுபிடிக்காததை கண்டித்தும், பிரசாந்தின் குடும்பத்தினரிடம் விசாரிக்க கோரியும் வடக்கு போலீஸ் நிலையத்தை நேற்று உறவினர்கள் முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து போலீசார் உரிய விசாரணை நடத்தி வருவதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
