×

கைதிகளுக்கு வரும் கடிதங்கள் தொடர்பான ஒப்புகை பதிவேட்டை பராமரிக்க வேண்டும்

சென்னை, ஏப். 5: கைதிகளுக்கான கடிதங்களை அவர்களிடம் வழங்கியதற்கான ஒப்புகை பெற்றது தொடர்பான பதிவேட்டை பராமரிக்குமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஆத்தூரைச் சேர்ந்த முனீராஜ் என்பவர் போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 15 நாள் அவசர விடுப்பு வழங்கக் கோரி தாய் லட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், அதுகுறித்து பிப்ரவரி 25ம் தேதியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அன்றைக்கே தண்டனை கைதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறைத் துறையின் நிராகரிப்பு உத்தரவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரலாம். எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

அதேசமயம், இந்த நிராகரிப்பு உத்தரவு கைதிக்கு தெரிவித்தது தொடர்பான ஒப்புகை கையெழுத்தும், தேதியும் வித்தியாசமாக உள்ளது. கைதிகளுக்கான கடிதங்களை அவர்களிடம் வழங்கும்போது ஒப்புகை பெற்றதை பதிவு செய்யும் பதிவேட்டை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து சிறை கண்காணிப்பாளர்களும் பராமரிக்க வேண்டும். பதிவேட்டில் கைதியின் பெயர், எண், கடிதம் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை தேதி, சிறை கண்காணிப்பாளரின் கையெழுத்து இருக்க வேண்டும். இந்த உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Chennai ,Court ,Tamil Nadu ,Puducherry ,Muneeraj ,Salem Athur ,POCSO ,
× RELATED போர் காரணமாக ஈரானில் சிக்கி தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் சென்னை வந்தனர்