வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வரும் ஏப்ரல் 16,17 மற்றும் 18 தேதிகளில் சிறப்பு கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேர்தல் பணிகளில் முக்கிய எதிர்கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு இடையில் சிறப்பு கூட்டத்தொடரை நடத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 816-ஆக உயர்த்துவது மற்றும் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்களை கொண்டு வர மத்திய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் 39 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் பாஜ-விற்கு எதிரான கட்சிகளில் உள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 28 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தந்த மாநில சட்டமன்ற தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளனர். முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சமயத்தில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயல்கிறது என்று புகார் தெரிவித்துள்ளார். ஒருவேளை தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் நாடாளுமன்ற அவைகளில் நாட்டின் தென்மாநில பிரதிநிதிகளின் குரல் குறையும். தேர்தல் சமயத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடந்தால் அது அரசியல் சதியாகும்.
ஒருவேளை நாங்கள் எதிர்க்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மசோதாவை எதிர்த்தே வாக்களிக்கும், இதனால் இரு அவைகளிலும் அந்த மசோதா தோல்வி அடையும். அதற்காகவே தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தல் பணிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவையை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். 67 உறுப்பினர்களை ஒதுக்கி வைத்துவிட்டு என்ன அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவீர்கள்..? என்று கேள்வி எழுப்பியுள்ளளார் ப.சிதம்பரம். எனவே தமிழகம் மற்றும் மேற்குவங்கம் தேர்தல்கள் முடிந்த பிறகு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
