×

ஆறாம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை – CBSE அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…

2026 – 2027-ஆம் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல; அது மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சியாகும்.

“இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம்” என்ற போர்வையில், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்மைத்துவம் நிறைந்த மொழிப் பாரம்பரியத்தைத் திட்டமிட்டு ஒதுக்கி, இந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை அரசியல் நோக்கத்துடன் பா.ஜ.க. தலைமையிலான NDA அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. “மும்மொழிக் கொள்கை” என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டு உள்ளார்.

தென் மாநில மாணவர்களை பொறுத்த வரை இந்தத் திட்டம், கட்டாய இந்தி என்பதைக் கடந்து வேறேதுமில்லை. இருப்பினும், இதில் ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றம் எங்கே இருக்கிறது? இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயமாகப் படிப்பார்களா.! இதுகுறித்த தெளிவின்மை, இதிலுள்ள ஒருசார்பு மற்றும் பாகுபாட்டை வெளிப்படுத்துகிறது.

இந்த முரண் வெளிப்படையானது, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க முடியாத – தொடர்ச்சியாகப் போதிய தமிழாசிரியர்களை நியமிக்கத் தவறிய இதே ஒன்றிய அரசு, இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்று மாநிலங்களுக்குப் பாடம் எடுக்க நினைக்கிறது. இது பொறுப்புணர்வல்ல; கபட நாடகத்தின் உச்சம் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். நம் நாட்டின் வலிமை என்பது, பன்முகத்தன்மையில் தான் இருக்கிறதே தவிர, திணிக்கப்படும் ஒற்றைத்தன்மையில் இல்லை. இந்த சமநிலையைக் குலைக்கும் எத்தகைய முயற்சிகளும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானதுமாகும். நம் நாட்டின் அடிப்படையான பன்மைத்துவத்தை தொட்டு பார்க்கும் இத்தகைய கொள்கைகள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிவை என்றும் முதல்வர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மும்மொழி என்ற போர்வையில் மத்திய அரசு செய்ய நினைப்பது கோடிக்கணக்கான இந்தியர்களின் மொழி அடையாளங்களை நேரடியாக அவமதிக்கும் செயலாக இருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் தொடர்ச்சியாக எழுப்பிய நியாயமான கவலைகளை ஒதுக்கி விட்டு, இந்தியை திணிப்பதில் ஒன்றிய அரசு மும்முரமாக இருப்பது கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : CBSE ,Principal ,M.O. K. Stalin ,Tamil Nadu ,Mu. K. Stalin ,
× RELATED தேர்தல் சமயத்தில் நாடாளுமன்ற சிறப்பு...