×

தமிழகத்தில் வெப்ப அலை நிலவும் நாட்கள் அதிகரிக்கும்.!! இந்திய வானிலை மையம் கணிப்பு

நாளுக்கு நாள் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலை வீசும் நாட்கள் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை இயல்பைவிட அதிகமாக இருக்கும். இந்த ஏப்ரலில் ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று IMD-ன் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

மேலும் எல்நினோ தாக்கம் காரணமாக தென்மேற்கு பருவமழை உருவாவதிலும் தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகம் முழுவதும் ஏப்ரல் – ஜூன் மாதம் வரை அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவை விட சற்று அதிகமாகவே இருக்கும். மேலும் குறைந்தபட்ச வெப்பநிலையும் அதிகரித்தே காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கடற்கரையோர மாவட்டங்களில் தீவிர வெப்ப அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் 10-ஆம் தேதியில் இருந்து கடலோர வடக்கு தமிழ்நாடு, வடகடலோர மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக இருக்கும். சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். இந்த மாதம் வழக்கத்தை விட அதிக வெப்பமானதாக இருக்கும்.

இடையிடையே வெப்பசலன மழை பெய்து நிவாரணம் தந்தாலும் தீவிர வெப்பத்தால் அசௌகரியங்கள் ஏற்படும். எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும் மற்றும் தங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என வானிலை மையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக சென்னை போன்ற முக்கிய நகர பகுதிகளில் தீவிர வெப்ப அலை வீச கூடும் எனவும், இதனை கவனத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையுடன் வெளியே செல்ல திட்டமிடுமாறும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. வெப்ப அலை தீவிரமாக இருக்கும் நாட்களில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் வெயிலில் செல்வதைத் தவிர்த்து, போதுமான அளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. வெப்ப அலை அதாவது Heat Wave என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில், அந்த இடத்தின் சராசரி வெப்பநிலையை விட மிக அதிகமான, வழக்கத்திற்கு மாறான வெப்பமான காற்று, தொடர்ந்து பல நாட்களுக்கு நீடிக்கும் ஒரு நிகழ்வாகும். வெப்ப அலையானது நம் ஆரோக்கியம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

Tags : Tamil Nadu ,India Meteorological Department ,Puducherry ,Kerala ,
× RELATED மதிமுக வேட்பாளர் உதய சூரியன்...