நாக்பூர்: நண்பனாகப் பழகிய பள்ளி மாணவரால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் அவர் கர்ப்பமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவரும், அதே பகுதியைச் சேர்ந்த பள்ளியில் இருந்து இடைநின்ற 14 வயது சிறுமியும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இந்த நட்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த மாணவர், சிறுமியைத் தொடர்ச்சியாகப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இவர்களுக்குள் நெருக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று வயிற்று வலி காரணமாக அவதிப்பட்ட அந்தச் சிறுமியை, தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் அவரது தாய் (35) மேயோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் 29 வார கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் பச்ய்பாவ்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘அவன் எனது சம்மதமின்றி பலமுறை என்னைப் பலாத்காரம் செய்தான்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த மாணவரைப் பிடித்து சிறுவர் நீதிக்கூழு முன் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர் அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். இதுகுறித்து சீனியர் இன்ஸ்பெக்டர் பாபுராவ் ராவத் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
