×

கொளத்தூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் நடந்ததாக போலீசில் புகார்: வழக்குப்பதிவு செய்யாமல் போலீஸ் விசாரணை

சென்னை: கொளத்தூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் நடந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் வழக்குப்பதிவு செய்யாமல் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர், கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என அனுமதி வாங்கப்பட்டிருந்தது. ஆனால் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் இருந்து வெளியே வந்த விஜய் தேர்தல் பிரசார வாகனத்தில் ஏறி அங்கிருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலைக்கு சென்ற விஜய் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த இடத்தில் 300 முதல் 500 பேர் வருவார்கள், என அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், சுமார் 7000 பேர் கூடினர். இதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கொடுங்கையூரில் இருந்து புறப்பட்ட விஜய் சுமார் 2 மணி நேரம் ரோடு ஷோ செய்து கொண்டே கொளத்தூருக்கு சென்றார்.

அங்கு கடும் கூட்ட நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் 5 நிமிடங்களில் தனது பேச்சை நிறுத்திய விஜய், போலீசாரின் பாதுகாப்பு சரி இல்லை என்று வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உதவி கணக்கு அலுவலர் குமார், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி கோயில் வடக்கு தெரு பகுதியில் தமிழக வெற்றிக் கழக கட்சியை சேர்ந்த சுமார் 3000 பேர் கூடி சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் தடையாக நின்று கொண்டிருந்தனர்.

பிற்பகல் 3.40 மணியளவில் தவெக கட்சியின் தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் வந்த போது சுமார் 5 ஆயிரம் பேர் அப்பகுதியில் கூடி பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அளவிற்கு சாலையை மறித்தனர். விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவ்வழியாக முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேற்படி தவெகவினர் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பிரசாரம் செய்யவும் 5 சவுண்ட் பாக்ஸ் அமைக்கவும் 300 பேர் மட்டுமே வருவார்கள் என கூறி தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்றனர்.

ஆனால் இந்த விதிமுறைகள் எதையுமே பின்பற்றவில்லை. தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே பிற்பகல் 3.40 மணிக்கு தவெக தலைவர் விஜய் சம்பவ இடத்திற்கு வந்து 5 ஆயிரம் பேர்களை கூட்டி ரோடு ஷோ நடத்தி அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் 30 சவுண்ட் பாக்ஸ் வைத்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய காரணத்தினால் விஜய் உள்ளிட்ட அவரது கட்சியினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையில் நடந்த விஜய் பிரசார கூட்டத்திலும் பல்வேறு தேர்தல் விதிமுறை மீறல்கள் நடந்ததாகவும், பிரசாரத்திற்கு வந்த தவெக நிர்வாகிகள் சிலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது இதுகுறித்தும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கிய மாவட்ட செயலாளர் சிவா மீதும் வழக்குப் பதிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Vijay ,rally ,Kolathur ,Chennai ,Thaweka ,Perambur ,
× RELATED திருமணம் ஆகாமல் கர்ப்பம் சுயமாக...