×

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற என்டிஏ கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும்: திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

திருவாரூர்: தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற என்டிஏ கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும் என்று திருவாரூரில் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளே முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். திருவாரூர் தெற்கு ரதவீதியில் நேற்று மாலை திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா, திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து, நன்னிலம் வேட்பாளர் எஸ்டிபிஐ முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்வர் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2026 சட்டமன்ற தேர்தலின் ‘சூப்பர் ஸ்டாராக’ விளங்கிக் கொண்டிருக்கும் தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டேன். நேற்று, தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, கொளத்தூர் தொகுதியில் என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன். இன்று, தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணிலிருந்து, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கான பிரசாரத்தை, பரப்புரையை தொடங்குகிறேன். திருவாரூர் என்றால் அது திமுக ஊர். அதனால் நான் இங்கிருந்து தொடங்குகிறேன்.

நான் உங்கள் வீட்டு பிள்ளை. நான் இந்த மண்ணின் மைந்தன். இன்னும் சொன்னால், தலைவர் கலைஞரின் மகன். உங்களால் உருவாக்கப்பட்ட இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்… அன்போடும், உரிமையோடும் கேட்கிறேன்… வெற்றி உறுதியா இந்த நான்கு பேருக்கும் நீங்கள் தரப்போவது வெற்றி! அது உறுதியா? (உறுதி- மக்கள்). வெற்றி உறுதியாகிவிட்டது. வேட்பாளர்கள் இருக்கையில் அமரலாம். இப்போது நீங்கள் சொன்ன உறுதிபோன்றே, நேற்று மாலை, கொள்கை உறவாக நம்முடன் இணைந்திருக்கும் கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரையும் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து, அவர்களுடன் கலந்து பேசி, ‘வெல்வோம் ஒன்றாக’ என்று உறுதி எடுத்திருக்கிறோம். அதை முடித்துவிட்டுதான் திருவாரூருக்கு வந்திருக்கிறேன்.

சற்றேறக்குறைய 22 ஆண்டுகளாக, அரசு ஊழியர்கள் போராடி கொண்டிருந்த கோரிக்கையான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறோம். இப்படி அனைத்து வகையிலும் தமிழ்நாடு டாப்பில் இன்றைக்கு வந்திருக்கிறது. இது, பாஜ தலைமையில் செயல்பட்டு கொண்டிருக்கும் அதிமுக உள்ளிட்ட அடிமை கட்சிகளுக்கு எல்லாம் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. அதனால், தமிழ்நாட்டை எப்படியாவது கலவர பூமியாக்கிவிடலாம் என்று திட்டமிட்டு, ஏராளமான போலி செய்திகளை தொடர்ந்து பரப்பி பார்த்தார்கள். கலவர வெறியுடன் திரிந்த அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது. அவர்கள் பரப்பியது அனைத்துமே அவதூறுதான் என்று உண்மை வெளிப்பட்டு, இன்றைக்கு மக்கள் முன்னால் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.

தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது, அந்த பெருமிதத்தோடும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களோடும்தான். நான் வெளியிட்ட இந்தத் தேர்தல் அறிக்கைக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம்! அந்தத் தேர்தல் அறிக்கையை நீங்கள் எல்லாம் தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் பார்த்தீர்களா… அதெல்லாம் வாக்குறுதிகள் மட்டுமல்ல. திராவிட மாடல் 2.0-வில் நிச்சயம் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள். பட்டியல் பெரிதாக இருக்கிறது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ஒரு மாபெரும் தொலைநோக்கு திட்டம் அறிவித்திருக்கிறேன். டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம், உறுதியாக சொல்கிறேன்… அடுத்த 5 ஆண்டுகளில் டெல்டா பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு மாறப்போகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சியை காண்பதற்காக அடுத்த 5 ஆண்டிற்குள் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் போகிறோம். இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம், கொஞ்சம்தான்! தேர்தல் அறிக்கை புத்தகத்தில் இன்னும் ஏராளமாக இருக்கிறது.

நான் கலைஞரின் மகன், சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன்! அதுமட்டுமல்ல, சொல்லாததையும் அதிரடியாக செய்வேன்! இது உங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு எதிராக இருக்கும் என்டிஏ கூட்டணிக்கும் தெரியும். 2011ல் இருந்து, 2021 வரைக்கும், தமிழ்நாட்டை பாழாக்கி, தலைகுனிய வைத்த அதிமுக. 2014ல் இருந்து இந்தியாவை மோசமான நிலைக்கு அழைத்து சென்றிருக்கும் பாஜவிடம் சரணாகதி அடைந்து ஒரு கூட்டணி அமைத்திருக்கிறது! அந்த கூட்டணியில், பாஜக கிளைச்செயலாளராக இருக்கிறார், அதிமுகவை அழிவு பாதையில் அழைத்து செல்லும் திரு பழனிசாமி அவர்கள். பாஜ கிளைச் செயலாளராக இன்றைக்கு மாறியிருக்கிறார்.

இப்போது அவர், நம்முடைய தேர்தல் அறிக்கையை பார்த்து, புலம்ப தொடங்கியிருக்கிறார். அது என்ன மாதிரியான புலம்பல் என்றால், நம்முடைய திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, கனவு இல்லம், விடியல் பயணம் போன்ற திராவிட மாடல் திட்டங்களைக் காப்பியடித்து, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அவர், நம்முடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து, காப்பி அடித்துவிட்டோம் என்று புலம்புகிறார்.

பழனிசாமி அவர்களின் அறிவுத்திறத்திற்கு, சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் தொடங்கி, பல எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், இப்போது புதிதாக ஒரு எடுத்துக்காட்டு வந்திருக்கிறது. அவருக்கு எதைப் பற்றியும் புரிதல் கிடையாது, தொலைநோக்கு பார்வையும் இல்லை என்பதை தன்னுடைய உளறல்களால் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவரின் உளறல்களிலேயே ஹைலைட் எது தெரியுமா? “எப்படி உங்களின் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்” என்று கேட்டால், “வரியை உயர்த்தி நிறைவேற்றுவோம்” என்று சொல்கிறார். பழனிசாமி அவர்களால் மட்டும்தான், இப்படியெல்லாம் சிந்திக்க முடியும்! அதனால்தான், அந்தளவிற்கு பழனிசாமி அவர்களை, ஈஸியாக மிரட்டி, தங்களின் அடிமைக் கூட்டணியில் வைத்திருக்கிறது பாஜ.

அந்த என்டிஏ கூட்டணிக்கு ஒரே ஒரு நோக்கம்தான், தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க வேண்டும். திராவிட மாடல் ஏற்படுத்தியிருக்கும் இந்த வளர்ச்சியை அழிக்க வேண்டும். இதுதான், என்டிஏ கூட்டணியின் நோக்கம். தமிழ்நாட்டில் நம்மை எதிர்ப்பதற்கு வலிமை இல்லை என்று, அ.தி.மு.க.வை விலைக்கு வாங்கியிருக்கிறது. சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி தரவில்லை. ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டிருக்கிறோம், தரவில்லை குடிநீர் திட்டத்திற்கான நிதியும் தரவில்லை. இத்தனை தடைகளையும் சமாளித்துப் பல்வேறு சாதனைகளை நாம் செய்திருக்கிறோம். திறமையான நிர்வாகத்தால் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக உயர்ந்திருக்கிறோம்.

இருப்பதிலேயே என்ன கொடுமை என்றால்? இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று, நம்முடைய வீட்டு குழந்தைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக்கூட இதுவரைக்கும் கொடுக்கவில்லை. இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? இப்படிப்பட்ட வஞ்சக கூட்டத்திடம் தமிழ்நாட்டு மக்களை ஒப்படைக்க முடியுமா? என்டிஏ வைத் தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும்! அப்போதுதான், தமிழ்நாட்டின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.

கரப்ஷன், கமிஷன், கலக்ஷன் என்று ஆட்சி நடத்திய பழனிசாமி அவர்களை மிரட்டி கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து, வரிசையாக பல துரோகங்களை செய்து, பிரிந்த மாதிரி நாடகங்களை நடத்தி, கடைசியாக இப்போது, டெல்லியில் தீர்மானித்து, தோற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது என்.டி.ஏ இதுதான் உண்மை. அதனால்தான் சொன்னேன்… இந்த தேர்தல் என்பது, தமிழ்நாடு அணி vs டெல்லி அணி! தமிழ்நாடு vs என்டிஏ. தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றால், திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், திமுக ஆட்சியில் தொடர வேண்டும், தமிழ்நாடு கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால், பாஜக – அதிமுக கூட்டணியையும், வேரோடு வீழ்த்த வேண்டும்.

நாம் போராடுவது, திமுகவின் வெற்றிக்காக மட்டுமல்ல, திமுக தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, இது தமிழ்நாட்டின் வெற்றி. எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த்தமிழ்நாட்டை காக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்களின் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை வழங்குவோம்.

ஏப்ரல் 23 அன்று, நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது நீங்கள் சிந்திக்க வேண்டியது, ஒன்றே ஒன்றுதான், என்டிஏவின் தமிழர் விரோத சந்தர்ப்பவாத கூட்டணியா? திமுக சாதனைகளின் தொடர்ச்சியா? என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்… தமிழ்நாடு வளம் பெற… நல்லாட்சி தொடர்ந்திட… ஆதரிப்பீர் உதயசூரியன் ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை! உதயசூரியன், உங்கள் சூரியன்! உதயசூரியன், உங்கள் சூரியன் வெல்வோம் ஒன்றாக. நன்றி வணக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

* சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு
திருவாரூர் தெற்கு ரதவீதியில் நேற்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டத்தை முடித்து கொண்டு தியாகராஜ சுவாமி கோயில் மேலகோபுரம் வரை சுமார் 100 மீட்டர் தூரம் நடந்து சென்றார். தேரோடும் மேலவீதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து செல்லும் போது சாலையின் இருபுறமும் நின்ற பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களை பார்த்து முதல்வர் கை அசைத்தவாறு சென்றார். அங்கு நின்ற மூதாட்டி ஒருவரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் நான் யார் என்று தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மூதாட்டி நீ என் பேரப்பிள்ளை, உன்னை மறக்க முடியுமா?. எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஓட்டு அனைத்தும் உனக்குதானப்பா என்று கூறினார். அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார்.

Tags : NDA alliance ,Tamil Nadu ,MLA ,Thiruvaroor ,K. Stalin ,Thiruvarur ,NDA ,Tamil Nadu Assembly ,
× RELATED புகை எச்சரிக்கை: லக்னோவில் அவசரமாகத் தரையிறங்கிய டெல்லி விமானம்!