×

மகளிர் உரிமைத் தொகை திட்டம் டிரென்ட்செட்டர் ஆகியுள்ளது: திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவாரூர்: தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்க துவங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று மாலை பிரசார பரப்புரையை தொடங்கினார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடை பெறுகிறது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அதன்படி திருவாரூரில் இருந்து இன்று மாலை பரப்புரையை தொடங்கினார். கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் இருந்து சுற்றுப்பயண பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் துவங்கினார். இதன்படி இன்று திருவாரூர் தெற்குரத வீதியில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

அதில் முதல்வர் பேசியதாவது; “திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர்; அதனால் திருவாரூரில் இருந்து பரப்புரையை தொடங்குகிறேன். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை; நான் இந்த மண்ணின் மைந்தன். நேற்று முன்தினம்தான் திருவாரூர் தேரோட்டம் நடந்து முடிந்தது. உலகப் பெருமை கொண்ட அந்த ஆழித்தேரை ஓட வைத்த தலைவர் நம் கலைஞர்.

திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கி நீதிமன்றம், பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி என அனைத்து வசதிகளையும் செய்தது கலைஞர். 2021ல் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை வழங்கினீர்கள். முதல் நாளிலேயே விடியல் பயணம் என்ற திட்டத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தேன்.

காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் என எண்ணற்ற திட்டங்கள் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டம் டிரென்ட்செட்டர் ஆகியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ.2,000 ஆக உயரப்போகிறது. மகளிருக்கு வழங்கும் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் மூலம் உங்களுக்கு வீட்டுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ளலாம். திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த பல்வேறு வதந்திகளை பரப்பினார்கள். கலவர வெறியோடு திரிந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. அவதூறு பரப்பியதால் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

எடப்பாடி பழனிசாமிக்கு எந்த புரிதலும் கிடையாது, தொலைநோக்குப் பார்வையும் கிடையாது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதே என்.டி.ஏ கூட்டணியின் ஒரே நோக்கம். பாஜகவிடம் சரணாகதி அடைந்து அதிமுக ஒரு கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் எடப்பாடி பாஜகவின் கிளைச் செயலாளராக உள்ளார்”என பேசினார்.

இதையடுத்து நாளை (1ம் தேதி) காலை 9 மணியளவில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி மேற்கு, கிழக்கு, ரங்கம், திருவெறும்பூர், லால்குடி, முசிறி, மணப்பாறை, மண்ணச்சநல்லூர், துறையூர் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலையில் கார் மூலம் கரூருக்கு புறப்பட்டு செல்கிறார். மாலை 5 மணியளவில் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

Tags : Chief Minister ,MLA ,Thiruvaroor ,K. Stalin ,Thiruvarur ,Tamil Nadu Assembly ,Principal ,Mu. K. Stalin ,Dimuka ,Alliance ,
× RELATED குஜராத்தில் குடியிருப்பு...