×

3 பட்டியலின மாணவர்கள் மர்ம மரணம் சிபிசிஐடி விசாரணை கோரி வழக்கு: தமிழக அரசு, டிஜிபி பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம், ஏப்.1: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த 3 மாணவர்களின் மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு, டிஜிபி உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தை அடுத்த விழுதாவடி தாங்கல் ஏரியில் கடந்த 2025 ஜனவரி 15ம் தேதி 3 ஆண் உடல்கள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல்களை கைப்பற்றிய உத்திரமேரூர் போலீசார் இது சம்பந்தமாக வழக்கும் பதிவு செய்திருந்தனர். ஓராண்டு கடந்தும் வழக்கின் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி பலியான சத்ரியன், விஷ்வா, பரத்வாஜ் ஆகியோரின் பெற்றோர் ஏழுமலை, முனியாண்டி, லோகேஸ்வரி ஆகிய மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், 2025 ஜனவரி 11ம் தேதி காணாமல் போன தங்களது மகன்கள் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதுவரை கொலை குற்றச்சாட்டின் கீழோ, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழோ வழக்கு பதிவு செய்யப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் போலீசார் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு பதிவு செய்யுமாறும் பாதிக்கப்பட்ட தங்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலலிக்குமாறு தமிழக அரசு, டிஜிபி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : CBCID ,Tamil Nadu government ,DGP ,Kanchipuram ,Madras High Court ,Kanchipuram district ,Old Seevaram… ,
× RELATED திருப்போரூர் முருகன், செம்பாக்கம்...