×

புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலைய லிப்டில் 3 மணி நேரமாக சிக்கி தவித்த குழந்தைகள் உள்பட 17 பேர் மீட்பு

ஆலந்தூர், மார்ச் 31: புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள லிப்டில் சிக்கிய குழந்தைகள் உட்பட 17 பேரை, அவசர உதவி எண்ணில் தொடர்பு கொண்டும் ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளாததால், தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். வேளச்சேரி – பரங்கிமலை இடையே பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, பறக்கும் ரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவை பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சங்கர், தனது மனைவி உள்பட குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு சென்றார்.

அங்கு தரிசனம் செய்துவிட்டு மீண்டும் பறக்கும் ரயிலில் ஏறி, இரவு 9.30 மணி அளவில் புழுதிவாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது 2வது தளத்தில் இருந்து கீழே செல்ல, சங்கர் குடும்பத்துடன் சேர்ந்து குழந்தைகள் உள்பட 17 பேர் லிப்டில் ஏறினர். கீழே சென்று கொண்டிருந்த லிப்ட், அதிகபாரம் காரணமாக முதல் தளத்தின் பாதி வழியிலேயே நின்றுவிட்டது. இதனால் அதில் இருந்த குழந்தைகள் உள்பட 17 பேரும் பதற்றமடைந்து கூச்சல் போட்டனர். லிப்ட்டில் உள்ள அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது மறுமுனையில் யாரும் போனை எடுக்கவில்லை.

இதையடுத்து சங்கர் செல்போன் மூலம் தனது நண்பரை தொடர்பு கொண்டு சூழ்நிலை குறித்து தெரிவித்துள்ளார். அவரது நண்பர் உடனடியாக புழுதிவாக்கம் திமுக கவுன்சிலர் ஜே.கே.மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.இதையடுத்து போலீசாரும், வேளச்சேரி தீயணைப்பு வீரர்களுடன் கவுன்சிலர் மணிகண்டன் புழுதிவாக்கம் ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் 2வது தளத்தில் பாதியில் நின்றிருந்த லிப்டின் நுழைவாயிலை திறந்து அதன் வாயிலாக மின் தூக்கி மேற்பகுதிக்கு சென்று அதில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியை அகற்றி அதன் வாயிலாக முதலில் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் 4 குழந்தைகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்தனர். இதன்பின்னர் அடுத்தடுத்து 13 பேரையும் மீட்டு பத்திரமாக வெளியே கொண்டுவந்தனர். உடல் வியர்த்து பதற்றமாக இருந்த அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தண்ணீர், உணவு என வழங்கப்பட்டது. லிப்டில் சிக்கி மீட்ட அதிகாரி பிரபாகரன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினருக்கு, மீட்கப்பட்ட ரயில் பயணிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்

Tags : Alandur ,
× RELATED காஸ் விலை உயர்வு, தட்டுப்பாட்டை...