டெல்லி: பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
பீகாரின் நாலந்தாவில் உள்ள ஒரு கோவிலில் (31-03-2026) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்திலிருந்து வெளியான மனதை உலுக்கும் புகைப்படங்களில், ஏராளமான பெண்கள் தரையில் சுயநினைவின்றி கிடந்தது தெரியவந்தது. சிலர் அந்த பெண்களுக்கு முதலுதவி செய்வதுவருகின்றனர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாளந்தாவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 8 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க, மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
