சென்னை: பாமக சார்பில் போட்டியிடும் 3 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி நேற்று வெளியிட்டார். அதன்படி, நடிகர் விஜய்யை எதிர்த்து திலகபாமாவும், திருமாவளவனை எதிர்த்து அன்பு சோழனும், பிரேமலதாவை எதிர்த்து தமிழரசியும் போட்டியிடுகின்றனர். அன்புமணியின் மனைவி சவுமியா தர்மபுரியில் போட்டியிடுகிறார். அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாமக அன்புமணி கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து, பாமகவுக்கு சேலம் (மேற்கு), தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 18 தொகுதிகளுடன் அன்புமணிக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் பாமகவுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் தேர்வை அன்புமணி தீவிரப்படுத்தி வந்தார். பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 25ம்தேதி அன்புமணி அறிவித்தார்.
அதில் கீழ்வேளூர் – ச.வடிவேல் ராவணன் (பாமக பொதுச் செயலாளர்), அம்பத்தூர் – கே.என்.சேகர் (மாநில துணைத் தலைவர்), செஞ்சி – அ.கணேஷ் குமார் (இளைஞரணி தலைவர்) ஆகிய 3 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பாமக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோன்று, விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவை எதிர்க்கும் பாமக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
இந்த நிலையில் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அன்புமணி நேற்று அறிவித்தார். அதன்படி பெரம்பூர்- திலகபாமா, தர்மபுரி- சவுமியா அன்புமணி, உத்திரமேரூர்- மகேஷ்குமார், ரிஷிவந்தியம்- செழியன், காட்டுமன்னார்கோவில்- அன்பு சோழன், விருத்தாசலம்- தமிழரசி ஆதிமூலம், சேலம் மேற்கு- கார்த்தி, பென்னாகரம்- பாடி வெ.செல்வம், போரூர்- சி.ஆர்.பாஸ்கரன், திருப்போரூர்- வழக்கறிஞர் கே.பாலு, ஜெயங்கொண்டம்- வைத்தி, சேலம் வடக்கு- சதாசிவம், விக்கிரவாண்டி- சி.சிவக்குமார், சோளிங்கர்- வழக்கறிஞர் க.சரவணன், மயிலாடுதுறை- சித்தமல்லி ஏ.பழனிசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவர் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகிறார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதேபோன்று, வழக்கறிஞர் பாலு திருப்போரூரில் களமிறங்குகிறார். அங்கு திமுக கூட்டணி கட்சியான விசிகவின் பன்னீர் தாஸ் போட்டியிடுகிறார்.
விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோயில் தனித் தொகுதியில் அவருக்கு எதிராக பாமக வேட்பாளராக அன்பு சோழன் களமிறக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதாவை எதிர்த்து பாமக சார்பில் தமிழரசி ஆதிமூலம் போட்டியிடுகிறார். மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தற்போது விக்கிரவாண்டி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார். மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினராக உள்ள சி.சதாசிவம் சேலம் வடக்கு தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
