திருப்போரூர், மார்ச் 31: நாவலூரில் சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழந்ததன் எதிரொலியாக வீடுகளில் உணவு சமைத்து டெலிவரி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறியதையடுத்து, ஓஎம்ஆரில் 1 லட்சம் தனியார் உழியர்கள் உணவு இன்றி தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஈரான் உடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் எதிரொலியாக தெற்காசியா முழுவதும் காஸ், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மாதம் ஒன்றுக்கு ஒரு வீட்டு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. வர்த்தக சிலிண்டர் விநியோகம் 90 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓட்டல்கள், கேட்டரிங் ஏஜென்சிகள், சிறு உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.
இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த மாதம் நடைபெற உள்ள திருமணங்களுக்கு சமையல் செய்வதில் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என கேட்டரிங் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓ.எம்.ஆர். சாலையில் 50க்கும் மேற்பட்ட தனியார் மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இவர்களில் 1 லட்சம் பேர் தனியார் மேன்சன் எனப்படும் விடுதிகளில் தங்கி உள்ளனர். இவர்களுக்கான உணவு சிறிய அளவிலான கேட்டரிங் ஏஜென்சிகள் மூலம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.
அண்மையில் நாவலூரில் இதுபோன்ற உணவுகளை தயாரித்து வழங்கும் வீட்டில் சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழந்தனர். இதனால் வீடுகளில் சமைத்து வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேச்சிலர்களாக தங்கியுள்ளவர்கள் தங்களின் தினசரி உணவு தேவைக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்போரூர், ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை, சிறுசேரி சிப்காட் தொழிற்பூங்கர், கேளம்பாக்கம், படூர், ஏகாட்டூர், நாவலூர், மாம்பாக்கம், புதுப்பாக்கம், சிறுசேரி பகுதிகளில் செயல்படும் பெரும்பாலான தனியார் மேன்சன்களில் உணவு நிறுத்தப்பட்டு விட்டது. சாலையோரங்களில் செயல்படும் தள்ளுவண்டி கடைகளும் இவ்வளவு நாட்கள் சமைத்து வந்த நிலையில், கடந்த 1 வாரமாக சிலிண்டர் கிடைக்காததால் தினசரி கடன் தண்டல் கட்டும் செலவிற்காகவாவது சமைத்து வருவாய் ஈட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தெருவோரங்களில் செங்கற்களை அடுக்கி வைத்தும், கட்டைகளை வைத்தும் சமையல் செய்ய தொடங்கி உள்ளனர். இதே நிலை நீடித்தால் சீமைக்கருவேல மரங்கள், சவுக்கு கட்டைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
