×

புழல் காந்தி பிரதான சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் கடும் அவதி

புழல், மார்ச் 31: புழல் காந்தி பிரதான சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால், மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். புழல் காந்தி பிரதான சாலையில் அரசு அலுவலகங்கள், இந்து, ஜெயின் கோயில்கள், மருத்துவமனைகள், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இச்சாலையில், தினசரி மாடுகள் சாலைகளில் குறுக்கும் நெருக்கமாக சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள், குறிப்பாக மோட்டார் சைக்கிள் செல்பவர்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், பல நேரங்களில் வாகன ஓட்டிகள், மாடுகள் மீது மோதி கீழ விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி புழல் 23வது வார்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி மாதவரம் மண்டலம் உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை சிறை பிடித்து, மாட்டு தொழுவத்தில் அடைத்து மாட்டு உரிமையாளர்கள் மீது உரிய அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Puzhal Gandhi ,Puzhal ,
× RELATED திருவள்ளூரில் வேட்புமனு தாக்கல்...