×

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அபார வெற்றி

 

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை தோற்கடித்தது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. அதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. கடந்தாண்டு பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் பெற்றதை தொடர்ந்து நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததை நினைவுகூரும் வகையில், இந்தாண்டு ஐபிஎல் முதல் போட்டியின் துவக்க விழா கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் சர்மா (7 ரன்), டிராவிஸ் ஹெட் (11 ரன்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் இஷான் கிஷனும், நிதிஷ் குமார் ரெட்டியும் இணை சேர்ந்தனர். நிதிஷ் குமார் ஆட்டமிழந்த பின் இஷான் கிஷண், ஹென்றிச் கிளாசன் இணை சேர்ந்து பெங்களூரு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த இணை 97 ரன்கள் விளாசிய நிலையில் கிளாசன் 31 ரன்னில் வீழ்ந்தார். அதன் பின்னும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இஷான் கிஷன் (38 பந்து, 5 சிக்சர், 8 பவுண்டரி, 80 ரன்), அபிநந்தன் சிங் வீசிய 16வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும், அனிகேத் வர்மாவின் (18 பந்து, 4 சிக்சர், 3 பவுண்டரி, 43 ரன்) அதிரடி ஆட்டத்தால், சன்ரைசர்ஸ் அணி, 9 விக்கெட் இழப்புக்கு, 201 ரன் குவித்தது. அதையடுத்து, 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 69 ரன்களை எடுத்தார். தேவ்தத் படிக்கல் 61 ரன்கள், அணியின் கேப்டன் ரஜத் படிதார் 31 ரன் எடுத்தார். விராட் கோலி, டிம் டேவிட்(16) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இஷான் கிஷண் 3000 ரன்கள்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் இஷான் கிஷண், பெங்களூரு அணிக்கு எதிராக அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்தி, 27 பந்துகளில் 2 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். இதன் மூலம், 113 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 3000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதில் 18 அரை சதங்கள், ஒரு சதம் அடங்கும்.
* ஐதராபாத் அணிக்கு எதிராக பந்து வீசிய பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேகப் டஃபி, 2வது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மாவை வீழ்த்தி, தொடரின் முதல் விக்கெட்டை எடுத்த வீரராக உருவெடுத்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் டிராவிஸ் ஹெட்டையும், 5வது ஓவரில் நிதிஷ் குமார் ரெட்டியையும் அவர் வீழ்த்தி கரவொலி பெற்றார்.

ஆர்சிபிக்கு ஆதரவாக அனுஷ்கா, மந்தனா
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியை காண, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா வந்திருந்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோரும் அனுஷ்கா சர்மா அருகில் அமர்ந்து, பெங்களூரு அணி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

ஐபிஎல்லின் முதல் ஆறு அபிஷேக் சர்மா ஜோரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று களம் கண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 8வது முறையாக இடம் பெற்று புதிய சாதனை படைத்தார். அவர், சன்ரைசர்ஸ் அணியில் 7 முறை இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னரின் சாதனையை நேற்று முறியடித்தார். டேவிட் வார்னர், கடந்த 2014 முதல் 2021 வரை சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடியுள்ளார்.

மாறாக, அபிஷேக் சர்மா கடந்த 2019 முதல் நடப்பாண்டு வரை சன்ரைசர்ஸ் அணியில் அங்கம் வகித்து வருகிறார். நேற்றைய போட்டியில் முதல் ஓவரை ஜேகப் டஃபி வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தில் அபிஷேக் சர்மா அட்டகாசமாக அடித்த பந்து சிக்சராக மாறியது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சிக்சர் என்ற பெருமையும் அந்த சிக்சருக்கு கிடைத்தது.

உயிரிழந்த ரசிகர்களுக்கு ஆர்சிபி வீரர்கள் அஞ்சலி
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று, ஐபிஎல் 19வது தொடரின் முதல் போட்டி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே நேற்று நடந்தது. போட்டி துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் மைதானத்தின் நடுவில் வரிசையாக நின்று வணக்கம் செலுத்தினர். பின்னர், கடந்தாண்டு பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து நிகழ்ந்த தள்ளு முள்ளு சம்பவத்தில் உயிரிழந்த 11 பேருக்கு அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தும் வகையில் பெங்களூரு அணி வீரர்கள் ஒரு நிமிடம் மவுனம் காத்தனர்.

Tags : Bengaluru ,Sunrisers ,IPL ,Royal Challengers ,Bangalore ,Hyderabad ,
× RELATED கெண்டைக்கால் காயத்துக்கு சிகிச்சை;...