கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்திய ஆண்டுகளில் ராம நவமி விழா, அரசியல் ரீதியாக மிக பிரமாண்டமான பேரணிகள், ஊர்வலங்களுடன் கொண்டாடப்படுகிறது. பாஜவும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தனித்தனி ஊர்வலங்களை நடத்தி ஆளுமையை நிரூபித்து வருகின்றன. இந்த பேரணிகளில் அடிக்கடி வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
அங்கு வரும் ஏப்ரல் மாதம் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹவுரா, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் ராம நவமி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன்படி முர்ஷிதாபாத் மாவட்டம் ரகுநாத் கஞ்ச் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை(27ம் தேதி) ராம நவமி விழா பேரணி நடைபெற்றது. அப்போது மெக்கென்சி என்ற இடத்தில் ராம நவமி ஊர்வலத்தில் அதிகளவில் இசை ஒலித்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையாக மாறிய மோதலில் கல் வீச்சு, தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின.
இதைத்தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.
