×

அண்ணாமலை, கே.டி.ராகவன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்காக 5 தொகுதிகளை மாற்றி கேட்டு பாஜ அழுத்தம்: அதிமுகவில் மீண்டும் வேட்பாளர்கள் மாற்றப்படுவார்களா?

 

சென்னை: அண்ணாமலை, ேக.டி.ராகவன், வெங்கடேசன் உள்ளிட்ட 5 பேருக்காக தொகுதிகளை மாற்றித் தரும்படி பாஜ மேலிடம், எடப்பாடி பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் மீண்டும் தொகுதிகள் மாற்றப்படலாம் என்ற பரபரப்பு அதிமுகவில் எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக-பாஜ கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக 168 தொகுதிகளிலும், பாஜ 27, பாமக 18, அமமுக 11, தமாகா 5, ஐஜேகே 2, தமமுக, புரட்சி பாரதம், புதியநீதிக்கட்சி என சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை முதல்கட்டமாக 23 பேர் கொண்ட பட்டியல் கடந்த 4 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

நேற்று முன்தினம் 127 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 13ல் அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. சைதாப்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகள் அமமுக, பாஜ மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 தொகுதிகளில் ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் மீண்டும் களமிறங்குகிறார். ஆனால் விருகம்பாக்கம், கொளத்தூர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம், வில்லிவாக்கம், திரு.விக.நகர், எழும்பூர், அண்ணாநகர், வேளச்சேரி, தி.நகர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

சென்னையில் திமுக ஆதிக்கம் காரணமாக, இந்த 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், அதிமுக தொகுதிகளை ஒதுக்கியதில் பாஜ மூத்த தலைவர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை சிங்கநால்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதியை கேட்டு வருகிறார். ஆனால் அந்த தொகுதியை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கவில்லை. வேண்டும் என்றே அண்ணாமலையை பழிவாங்கவே அவர் ஒதுக்காமல் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியானது.

இதனால் அண்ணாமலையும், அவரது ஆதரவாளர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்துள்ளார். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமியை திட்டி அண்ணாமலை பேசிய வீடியோக்களை பாஜவினரே மீண்டும் பரப்பி வருகின்றனர். இதனால் கூட்டணியில் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல கோவை வடக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வசந்தராஜாவும், கிணத்துக்கடவு தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. அவரது ஆதரவாளர்கள், தீ குளிக்க முயற்சி, முற்றுகைப் போராட்டம் நடத்தினர். கட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அதேபோல பழனியிலும் பாஜவினர் போராட்டம் நடத்தினர். மேலும், செங்கல்பட்டு தொகுதியை கே.டி.ராகவனுக்காக பாஜ கேட்டது. ஆனால் அதிமுக கொடுக்கவில்லை. அங்கு கஜா(எ)கஜேந்திரனை வேட்பாளரை அறிவித்துவிட்டது. அதேபோல ஒன்றிய அரசில் தூய்மை பணியாளர் வாரிய தலைவராக உள்ள வெங்கடேசனும் தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு வழங்கவில்லை. இதனால் மொத்தமாக 5 தொகுதிகளை மாற்றித் தரவேண்டும் என்று டெல்லி பாஜ தலைமையிடம் தமிழக பாஜ கோரிக்கை விடுத்துள்ளது. தொகுதியை மாற்றித்தராவிட்டால் அண்ணாமலை, கே.டி.ராகவன், வசந்தராஜா, வெங்கடேசன் ஆகியோரது ஆதரவாளர்கள் குழிபறிப்பு வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று பாஜ அஞ்சுகிறது.

இதனால் கூட்டணி சுமுகமாக செல்ல தொகுதிகளை மாற்றித் தரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பாஜ மேலிடம் கோரிக்கை விட்டுள்ளது. இதனால் பாஜ வேட்பாளர்கள் அறிவிப்பும் தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக, பாஜவுக்கு ஒதுக்கிய ராசிபுரம், கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளை எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளது. இதனால் அதிமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மாற்றப்பட்டு தொகுதிகள் மாற்றப்படலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

Tags : Annamalai, K. D. ,Raghavan ,Aditmukh ,Chennai ,Annamalai, ,Eka ,. D. BAJA MAALIDAM ,EDAPPADI PALANISAMI ,RAGAVAN ,VENKADESAN ,Tamil Nadu Legislative Assembly Election ,Aditmug-Baja Coalition ,
× RELATED அதிமுக சார்பில் சட்டமன்றத்...