பெரம்பூர்: தீபாவளி சீட்டு மோசடியில் ஒருவரை கைது செய்துள்ள நிலையில், 2 பெண்களை தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்தவர் பேபி (48). இவர் ரயில்வேயில் ஒப்பந்த தொழிலாளர். இவருக்கு நன்கு அறிமுகமான செல்வி, ஷாலினி, முருகன் என்கின்ற சந்திரகுமார்ஆகியோரிடம் பேபி கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி சீட்டு கட்டி வந்துள்ளார். மேலும் இவர் மூலம் 31 பேர் சீட்டில் சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், முதிர்வு காலம் முடிந்தபிறகும் 31 பேருக்கும் 3 லட்சத்து 72 ஆயிரம், இரண்டு கிராம் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதுசம்பந்தமாக பேபி கொடுத்த புகாரின்படி, வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த முருகன் என்கின்ற சந்திரகுமார் (43) நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் 2 பெண்களை தேடி வருகின்றனர்.
