×

உல்லாச வாழ்க்கைக்கு பணம் தராததால் சிறுவனை கொலை செய்த மாமன்

*கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

திருமலை : உல்லாச வாழ்க்கைக்கு பணம் தராததால், சிறுவனை கொலை செய்த மாமனை கைது செய்தபோது, போலீசாரை தாக்கி தப்பியோடிய கொலையாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அனந்தபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், யாதிகி மண்டலத்தின் கொனுப்பலபாடு கிராமத்தை சேர்ந்தவர் போய கோவிந்து. இவரது மனைவி லட்சுமி கண்டம்மா. இவர்களுக்கு லலிதா உட்பட 3 மகள்களும், ஹேமசந்திரா(7) என்ற மகனும் உள்ளனர். இவர் யாதிகியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வந்தார்.

இதையடுத்து லலிதா, நிட்டூர் கிராமத்தை சேர்ந்த சர்வேஷ் என்பவரை காதலித்ததால், போய கோவிந்து, லட்சுமி கண்டம்மா ஆகியோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சர்வேஷ், லலிதா மற்றும் லட்சுமி கண்டம்மா ஆகியோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். அதற்கு அவர்கள் ஒத்துவராமல், சர்வேஷை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சர்வேஷ் ஆத்திரமடைந்து, ஹேமசந்திராவை கொலை செய்ய திட்டமிட்டான்.

கடந்த 25ம் தேதி மதியம், பள்ளிக்கு சென்ற ஹேமசந்திராவை ​​யாருக்கும் தெரியாமல் தனது பைக்கில், கடத்தி சென்று சிந்தலையபள்ளி- குண்டங்கோட்டா மலையில் உள்ள ஒரு குன்றிக்கு அழைத்து சென்று, தனது மனைவி மற்றும் மாமியாரின் மீது உள்ள ஆத்திரத்தில், ஹேமசந்திராவை, கொடுரமாக கல்லால் தாக்கி கொலை செய்து, அங்குள்ள பாறைகளுக்கு இடையே சடலத்தை மறைத்து வைத்தான்.

இதையடுத்து பள்ளிக்கு சென்ற ஹேமசந்திரா, வீட்டிற்கு வராததால், அவனது பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது சர்வேஷூம் ஒன்றும் தெரியாததுபோல் நடந்து கொண்டு, ஹேமசந்திராவை, தேடுவதுபோல், மாமியார் மற்றும் மாமனாருடன் சேர்ந்து தேடியுள்ளார்.

ஆனால், சிறுவன் கிடைக்காததால், யாதிகி காவல் நிலையத்தில் போய கோவிந்து புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஹேமசந்திராவை, முகமூடி அனிந்த வாலிபர் பைக்கில் கொண்டு சென்றது தெரியவந்தது. அதன்பிறகு சர்வேஷ் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தான் பணம் கேட்டு கொடுக்காததால், ஹேமசந்திராவை கொலை செய்து பாறைகளுக்கு இடையில் வைத்திருப்பதை கூறினார். இதையடுத்து போலீசார் சர்வேஷை கைது செய்து, சடலத்தை மீட்க கொலை செய்யப்பட்ட மலைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது சர்வேஷ், சடலத்தை காண்பித்துவிட்டு, அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து, இன்ஸ்பெக்டர் ராமசுப்பையா மற்றும் மற்றோரு போலீசாரை சர்வேஷ் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பி ஓடினான்.

இதில் போலீசார் காயமடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராமசுப்பையா தான் வைத்திருந்த கை துப்பாக்கியால், சர்வேஷின் காலில் சுட்டார். இதில் காயமடைந்த சர்வேஷை அங்கிருந்த போலீசார் பிடித்தனர்.

இதையடுத்து காயமடைந்த 3 பேரையும், சிகிச்சைக்காக போலீசார் தாடிபத்ரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் ஹேமசந்திராவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்திற்காக தனது மைத்துனரான சிறுவனை, கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Anantapura district ,Ananthapuram district ,AP ,
× RELATED கறிக்கோழி சரக்கு வேனில் நூதன முறையில் குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது