×

சேத்துமடை கால்வாய் திடீர் உடைப்பு தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைக்கும் பணி துவக்கம்

*அதிகாரிகள் நேரில் ஆய்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதியிலிருந்து, சேத்துமடை கால்வாய் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. சுமார் 8 கி.மீ தூரமுள்ள இந்த கால்வாயின் பெரும் பகுதி அடர்ந்த வனப்பகுதி வழியாகவே செல்கிறது.

ஆனால் இந்த கால்வாயை சீரமைக்காமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.இதனால் அதில் முறிந்த மரக்கிளைகள் அடைத்து தண்ணீர் தேங்கி செல்வதால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்க்கார்பதியிலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் சேத்துமடை கால்வாய் திடீர் என நேற்று முன்தினம் மாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிலிருந்து தண்ணீர் விரயமாக துவங்கியது. இதையறிந்த பொதுப்பணி துறையினர், சேத்துமடை கால்வாய்க்கு செல்லும் தண்ணீர் திறப்பை நிறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது சுமார் 10 மீட்டர் அகலத்தில் கால்வாய் உடைப்பு ஏற்பட்டதை அறிந்தனர். இதையடுத்து அந்த கால்வாயை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த கால்வாய் உடைப்பை இன்னும் 10 நாட்களில் சீரமைத்து மீண்டும் சேத்துமடை கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi ,Sethumadi Canal ,Sarkarpati ,
× RELATED வேட்புமனு தாக்கல் செய்யும் போது,...