சென்னை: மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை நிருபர்களிடம் கூறியதாவது: பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கியது ராமதாஸ், அந்த கட்சிக்காக பாடுபட்டது, வளர்த்தது ஜெ.குரு தான். கடந்த 2004ம் ஆண்டு வரை கட்சி நன்றாக இருந்தது. எப்போது அன்புமணி கட்சிக்குள் வந்தாரோ அதற்கு பிறகு வன்னிய சமூக மக்களின் அரசியல் அதிகாரம் எல்லாமே பறிக்கப்பட்டது. கட்சியை கொண்டு போய் அடகு வைப்பது இதே வேலையாகவே இருந்தார். வன்னிய சமுதாய மக்களுக்கு கட்சி ரீதியாக எந்த நல்லதும் பண்ணவில்லை.
தற்போது பாஜவுடன் கூட்டணி வைத்துள்ள அன்புமணி 10.5 சதவீதம் இடஒதுக்கீடு பற்றி என்ன பேசினார். வன்னியர் சங்கம், பாமக ஆரம்பித்தது வன்னிய சமுதாய மக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பாஜக, அதிமுகவில் கூட்டணியில் இதைப்பற்றி எதுவும் கூறாமல் சீட்டு, நோட்டுகளை வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறார். 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்து வன்னிய மக்களை ஏமாற்றி 2021ம் ஆண்டு தேர்தலில் ஜெயித்த எடப்பாடி பழனிச்சாமி வன்னிய மக்களுக்கு துரோகம் செய்தார். இவ்வாறு விருதாம்பிகை கூறினார்.
