- யூனியன் அரசு
- பொதுவுடைமைக்கட்சி
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- வீரபாண்டியன்
- பிஜேபி ஒன்றியம்
- பாராளுமன்ற
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: பாஜ ஒன்றிய அரசு, மாற்றுப் பாலினத்தார் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் தனிநபர் அந்தரங்க பாதுகாப்பு உரிமைகளும் தன்னாட்சி சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவுகள் 15, 16, 19 (1) அ மற்றும் 21 ஆகியவற்றின் மூலம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளும், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கிலும், நீதிபதி கே.எஸ்.புட்ட சுவாமி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
பாஜ – ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் சித்தாந்தத்தின் உண்மை முகத்தை வெளிப்படுகிறது. ஒன்றிய அரசின் சட்டத்திருத்த மசோதா மாற்றுப் பாலினத்தினர்களை சமூகத்தில் இருந்து மேலும், மேலும் வெளியேற்றி, சமூக ஒடுக்குமுறை தாக்குதல் களத்துக்கு தள்ளி விடுகிறது. சர்வ தேச மனித உரிமை கோட்பாடுகளுக்கு எதிரான மாற்றுப் பாலினத்தினர் சட்ட திருத்த மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை பறிக்கும், மாற்றுப் பாலினத்தினர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல், ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
எதிர்மறை நோக்கங்கள் கொண்ட சட்டதிருத்த மசோதாவை திருநங்கைகள் மற்றும் அவர்களது அமைப்புகள் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் விரிவாக விவாதித்து, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவும், சமூக, பொருளாதார பாதுகாப்பு அரணை வலுப்படுத்தவும் உரிய திருத்தங்களை சேர்க்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
