தர்மபுரி : தர்மபுரி நகராட்சியில் ரூ.82.15 கோடியில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சனத்குமார நதியின் கால்வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு தர்மபுரி நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.32 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
முதல் கட்டமாக 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக, மதிகோண்பாளையம் மற்றும் காந்திபாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. மதிகோன்பாளையம்-அரூர் பிரிவு சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு காலை முதல் மாலை வரை பாதாள சாக்கடை கழிவுநீரை மின்மோட்டார் இயக்கி சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
இதை சுத்திகரித்து இறுதியாக கிடைக்கும் கழிவு மண் படிவம் சேகரித்து வைக்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையத்தில், தினசரி 38 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. சுத்திகரிப்பு செய்யும் கழிவுநீர் விவசாய பணிக்கு திருப்பி விடப்படுகிறது. இந்நிலையில், தர்மபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்த 14 வார்டுகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
தற்போது தமிழ்நாடு காலநிலை மாற்றியமைக்கும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தர்மபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பகுதி -2 ரூ.82.15 கோடியில் நடந்து வருகிறது. 14 வார்டுகளில் பாதாள சாக்கடை குழாய் மற்றும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
இதுபோக ஏற்கனவே விடுபட்ட 3 வார்டுகளிலும் திட்டப்பணிகள் நடக்கிறது. மொத்தம் 17 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கிறது. மேலும் 33 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக ஒருங்கிணைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதுகுறித்து நகரமன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது கூறியதாவது: தர்மபுரி நகராட்சியில் 14 வார்டுகள் மற்றும் மேலும் 3 வார்டுகள் என 17 வார்டுகளில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ரூ.82.15 கோடியில் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் ஒருங்கிணைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த தெருக்களில், சாலைகள் உடனுக்குடன் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமைத்து பராமரிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு நிரந்தர பயனளிக்கும்.
கழிவுநீர், சாக்கடை நீர் திறந்த வெளியில் தேங்குவதும், துர்நாற்றம் வீசுவதும் தவிர்க்கப்படுகிறது. வீட்டிற்குள் அமைக்க வேண்டிய செப்டிக் டேங்க் அவசியமில்லை. கொசுவினால் பரவும் நோய்கள் முற்றிலும் தடுக்கப்படும்.
நோய் பரப்பும் பூச்சிகள், கிருமிகள் உற்பத்தியை தடுத்து நோய் பரவுதை தடுக்கலாம். கழிவுநீர் தேக்கத்தால் கிணற்று நீர், ஆழ்துளை கிணற்று நீர் மாசுபடுவது தவிர்க்கப்படுகிறது. மழைக்காலத்தில் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து சாலைகளில் வழிந்து ஓடாது.
பாதாள சாக்கடையில் வெளியேற்றப்படும் கழிவுநீரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தர நிர்ணயப்படி சுத்தம் செய்வதால், அந்த நீரை விவசாயத்திற்கு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கையாகவே மழை குறைவாக பெய்யும் தர்மபுரி மாவட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட சாக்கடை கழிவுநீர் விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, சுற்றுப்புற சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயனளிக்கும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
