×

தஞ்சை அடுத்த அம்மாப்பேட்டை பகுதியில் கோடை நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

தஞ்சாவூர் : தஞ்சை அடுத்த அம்மாப்பேட்டை பகுதியில் கோடை நெல் சாகுபடியில் இயந்திரம் மூலம் உழவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை, மற்றும் சம்பா, தாளடி சாகுபடி, நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவை விட அதிக அளவில் நடைபெற்றது. அதே போல நெல் கொள்முதலும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.தற்போது முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெறும். அதன்படி தற்போது பம்புசெட் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் உழவுப் பணி, பாய் நாற்றாங்கால் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு சில வயல்களில் எந்திரம் மூலம் உழவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றன. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகளும் கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Ammapettai ,Thanjay ,Thanjavur ,Ammappetta ,Thanjay District ,Thanjai ,Nagai ,Thiruvarur ,Mayiladuthura ,Tamil Nadu ,
× RELATED ஆவடி காவல் ஆணையரகத்தில் தவெக தலைவர்...