*நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
நெல்லை : நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது 10 மாதங்களே நிரம்பிய பெண் குழந்தை ஒன்று கடந்த 2023 ஆகஸ்ட் 20ம்தேதி மாலை தெருவில் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு சென்ற முக்கூடல் மைலப்பபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான லட்சுமணகுமார் (42) என்பவர் சிறுமியிடம் நைசாக பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அப்போதைய இன்ஸ்பெக்டர் அன்னபூரணி, போக்சோ 5(எம்), 6 உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிந்து லட்சுமணகுமாரை கைது செய்தார். இவ்வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளி லட்சுமணகுமாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேலும் அவருக்கு ரூ.5000 அபராதமும் விதித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜராகினார். சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல்நிலைய தற்போதைய இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் ஏட்டு யாஸ்மின் ஆகியோர் வழக்கு விசாரணை விரைவாக நடக்க சிறப்பாக செயல்பட்டனர்.
தண்டனை பெற்ற போக்சோ குற்றவாளிகள்
நெல்லையில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மற்றும் நேற்று வரை மொத்தம் 6 போக்சோ குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் மரண தண்டனை, சாகும் வரை சிறை தண்டனைகள் தலா ஒருவருக்கும், ஆயுள் தண்டனை ஒருவருக்கும், 25 ஆண்டு சிறை தண்டனை ஒருவருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எஸ்பி பாராட்டு
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விரைவில் நீதி கிடைக்க சிறப்பாக செயல்பட்ட அரசு வக்கீல் உஷா, ஏடிஎஸ்பி சண்முகம், டிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, விசாரணை அதிகாரி அன்னப்பூரணி, போலீஸ் பெண் ஏட்டு யாஸ்மின் ஆகியோரை எஸ்பி பிரசன்னகுமார் பாராட்டினார்.
