நெய்வேலி, மார்ச் 27:கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 5 சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் நெய்வேலி வட்டம் 5 சுடுகாடு செல்லும் சாலையில் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விசாரணைக்கு அழைத்தபோது, போலீசாரை பார்த்து அவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து நெய்வேலி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வடக்கு மேலூர் வடக்கு தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் எலி என்கிற சந்துரு(22), இந்திரா நகர் மாற்று குடியிருப்பு 4 வது மெயின் தெருவை சேர்ந்த வீராசாமி மகன் ஆகாஷ்(20), கீழூர் தெற்கு தெருவை சேர்ந்த ஞானவேல் மகன் அன்பு செல்வன்(24) என்பதும், இவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 1.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
