சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னையில் நாளை மறுநாள் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் தவெக சார்பில் அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். நடிகர் விஜய்யை முதல்வர் வேட்பாளர் என ஏற்கும் கட்சியுடன் கூட்டணி என்றும் அவ்வாறு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் எனவும் தனது நிலைப்பாட்டை அறிவித்து ஏதாவது கட்சி கூட்டணிக்கு வரும் எனக் காத்துக்கிடந்தது தவெக. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பிற்கு தமிழகத்தில் மாறாக எந்தக் கட்சியும் தவெக கூட்டணிக்கு வரவில்லை.
அதேநேரம், புதுச்சேரியில் முதலில் தனித்துப்போட்டி என முடிவு செய்து 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களையும் அறிவித்தது தவெக. ஆனால், அடுத்த நாள் நேயம் மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கியது. இதை தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய தீவிரம் காட்டத் தொடங்கியது தவெக. தவெக சார்பில் போட்டியிட தொண்டர்கள் 50,000 விருப்பமனு வாங்கியதாக நிர்வாகிகள் கூறிய நிலையில், திரும்ப வந்த விருப்ப மனுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்துள்ளது.
மேலும், தவெக முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வுக்கு பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. பணம் கொடுப்பவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதாக தவெகவினர் தெரிவிக்கின்றனர். அதனால் விருப்பமனு கொடுத்தவர்களும் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. விருப்பமனு கொடுத்தவர்களில் தவெக முக்கிய நிர்வாகிகளின் அளவுகோலின்படி தகுதி உள்ளவர்களை புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேர்காணல் செய்து பட்டியலை தயார் செய்தனர். அவர்களை விஜய் சந்தித்து இறுதி செய்து, அவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். ஒவ்வொரு கட்டமாக தங்களின் வேட்பாளர்களை இறுதி செய்தது.
முதல்கட்டத்தில் 60, இரண்டாம் கட்டத்தில் 50 என வேட்பாளர்களை இறுதி செய்தனர். அதை தொடர்ந்து நேற்று மீதமுள்ள வேட்பாளார்களை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் தவெக முக்கிய நிர்வாகிகள். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை மறுநாள் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. அதற்கு அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்துகிறார் எனக் கூறப்படுகிறது.
