×

தேவேந்திர குல வேளாளர்களை அதிமுக அவமதித்துவிட்டது: 70 தொகுதிகளில் புதிய தமிழகம் தனித்து போட்டி; 120 தொகுதியில் நாங்க ஸ்டிராங்; கிருஷ்ணசாமி கெத்து

கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேற்று அளித்த பேட்டி: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக புதிய தமிழகம் கட்சியினரிடம் விருப்ப மனு பெற்று, வேட்பாளர் நேர்காணல் நடத்தி வருகிறோம். 60 தொகுதிகளை அடையாளம் கண்டு போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறோம். 2019, 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தோம். அந்த கூட்டணியில் தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம்.

புதிய தமிழகம் கட்சி 21 மாவட்டங்களில் உள்ள 120 தொகுதிகளில் வலுவாக இருப்பதால், 12 முதல் 15 சீட்கள் தர வேண்டும் எனவும், தேவேந்திர குல வேளாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் எனவும் கேட்டோம். ஆனால் 5 தொகுதிகள் தருவதாக கூறிய அதிமுகவினர், எங்களுக்கு பெரிய பலம் இல்லாத திருவிடைமருதூர் போன்ற தொகுதிகளை தருவதாக கூறினார்கள். நாங்கள் கேட்ட தொகுதிகளை தர முன்வரவில்லை. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதிமுக அணியில் இடம்பெற வேண்டும் என பெருமுயற்சி எடுத்தோம். கூட்டணி பேச்சுவார்த்தை நின்றுபோனது என்பது தேவேந்திர குல வேளாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. எங்களை அதிமுக அவமரியாதை செய்ததோடு, புறக்கணித்து விட்டதாக மிகப்பெரிய கொந்தளிப்பு உள்ளது. அதனால் எங்களது வலுவை காட்டும் வகையில் தனித்து போட்டியிட கட்சி நிர்வாகிகள் கேட்டு கொண்டதால், 60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.

ஒருவேளை நாங்கள் கேட்கும் எண்ணிக்கையும், இடமும் தர அதிமுக முன்வந்தால் மீண்டும் கூட்டணி சேர்வது குறித்து பரிசீலிப்போம். எங்களை புறக்கணித்து இருப்பது, அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். கூட்டணியில் சேருமாறு பாஜ எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மாற்று அணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தனித்து களம் காண ஆயத்தமாகி வருகிறோம். எந்த தொகுதியில் நான் போட்டியிடுவது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Devendra ,Vellalars ,Puthiya Tamil Nadu ,Krishnasamy ,Kuniyamuthur, Coimbatore ,Puthiya Tamil Nadu party ,2026 assembly elections ,
× RELATED தாமரை சின்னத்தில் போட்டியிடும்...