மும்பை: 19வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி- சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதுகின்றன. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், கேப்டன்கள் சந்திப்பு நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது.
இதில் 2024ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து பெரும்பாலான கேப்டன்கள் அதிருப்தியை வெளிபடுத்தினர். இம்பாக்ட் பிளேயர் விதி அடுத்த ஆண்டு (2027) ஆண்டு வரை நீடிக்கும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த விதி விவாதத்திற்குள்ளாகி வருகிறது. ஆனால் 2027ம் ஆண்டுக்கு பிறகு தான் இதை மறுபரிசீலனை செய்ய முடியும், அதற்கு முன்பு முடியாது என அவர்களிடம் ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டர்களின் வளர்ச்சிக்கு `இம்பாக்ட் பிளேயர்’ திட்டம் தடையாக இருப்பதாகக் கூறி, தனக்கு அது பிடிக்கவில்லை என 2024ம் ஆண்டிலேயே ரோகித்சர்மா கூறி இருந்தார். மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல் உள்ளிட்டோரும் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த விதி ஆல்-ரவுண்டர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தொடரும் எதிர்ப்பு காரணமாக 2028 சீசனில் இருந்து இம்பாக்ட் பிளேயர் திட்டம் கைவிடப்படும் என தெரிகிறது.
மேலும் பனிப்பொழிவு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் 2வது பவுலிங் செய்யும் அணி 10 ஓவர் முடிந்த பின்னர் பந்தை மாற்றிக்கொள்ளலாம் என கடந்த சீசனில் அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் முதலில் பவுலிங் செய்யும் அணியும் 10 ஓவருக்கு பின்னர் பந்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என ஒரு கேப்டன் முன்மொழிந்தார். இந்த கூட்டத்தின் போது போட்டி நடைபெறும் நாளில், அந்த பிட்சில் எந்த ஒரு அணிக்கும் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படாது போன்ற தகவல்களும் தெரிவிக்கப்பட்டது.
6 ஆண்டுக்கு பின்….
ஐபிஎல் வரலாற்றில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் ஐபிஎல் அணிகளின் அனைத்து கேப்டன்களும் இந்திய வீரர்களாக நேற்று போட்டோ சூட்டில் கலந்துகொண்டனர். சன் ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளை தவற விடுவதால் இஷான்கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றுபோட்டோ சூட்டில் கலந்துகொண்டார். இதற்கு முன் 2019ம் ஆண்டில் 8 கேப்டன்கள் இந்தியர்களாக இருந்தனர்.
ஆர்சிபி அணியின் பெயர் மாற்றமா?
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரூ.16,706 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்சிபியின் புதிய இணை உரிமையாளராக அனன்யா பிர்லா அறிவிக்கப்பட்டுள்ளார். அணி கைமாறிய நிலையில் ஆர்சிபியின் பெயர் மாற்றப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால் இதனை அனன்யா பிர்லா மறுத்துள்ளார். அணியின் பெயர் மாற்றப்படாது என உறுதியளித்துள்ளார்.
