×

மயாமி ஓபன் டென்னிஸ்: விறுவிறு திரில்லரில் வென்ற துறுதுறு கோகோ காஃப்; செமிபைனலுக்கு முன்னேற்றம்

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் மயாமி நகரில், மயாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீராங்கனை கோகோ காஃப், சுவிட்சர்லாந்தை சேர்ந்த, உலகின் 12ம் நிலை வீராங்கனை பெலிண்டா பென்சிக் உடன் மோதினர். துவக்கம் முதல் இரு வீராங்கனைகளும் விட்டுக் கொடுக்காமல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டை 6-3 என்ற புள்ளிகணக்கில் காஃப் வசப்படுத்தினார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய பென்சிக் 6-1 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார்.

அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டில் சிறப்பாக ஆடிய காஃப், 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் செக் வீராங்கனை கரோலினா முஸோவா, கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகோ மோதினர். இப்போட்டியில் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய கரோலினா, 7-5, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று நடைபெறும் அரையிறுதியில் கோகோ காஃப் – கரோலினா முஸோவா மோதவுள்ளனர்.

* காலிறுதியில் சின்னர்
மயாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சன் மோதினர். முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் சின்னர் வென்றார். இருப்பினும் 2வது செட்டில் கடும் இழுபறி காணப்பட்டதால் டைபிரேக்கர் வரை அந்த செட் நீண்டது. கடைசியில் 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை சின்னர் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடந்த மற்ற போட்டிகளில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ், அமெரிக்க வீரர் பிரான்சஸ் டியாபோ, அர்ஜென்டினா வீரர் பிரான்சிஸ்கோ செருண்டோலோ வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுகளில் நுழைந்தனர்.

Tags : Miami Open Tennis ,Coco Gauff ,Miami ,Miami, USA ,
× RELATED 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக ரிங்கு சிங் நியமனம்!