புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. கடந்த 16-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதனை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது.
வழக்கமாக தமிழகத்துடன் சேர்ந்து புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முன்னதாக நடைபெறுகிறது. அதாவது தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் புதுச்சேரியில் முன்னதாக ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் மிக குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக பல்வேறு குழப்பங்கள் நீடித்தன. இருப்பினும் கடந்த 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் 2 நாட்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இந்த நிலையில், இன்று(26-03-2026) மதியம் 3 மணியுடன் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்காக கால அவசாகம் நிறைவடைந்தது.
புதுச்சேரி களத்தை பொறுத்தவரையில் 411 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
