×

எரிபொருள் தட்டுப்பாடு..? குஜராத்தை தொடர்ந்து அசாம், கர்நாடகாவிலும் பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த பொதுமக்கள்: வாகன ஓட்டிகள் பீதி அடைய வேண்டாம் என ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் அசாம் பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் குவிந்தனர். யாரும் பீதியடைய வேண்டாம் என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. வளைகுடா நாடுகளில் நடந்து வரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசலுக்கும் அந்த நிலை வரலாம் என மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் அசாமின் கவுகாத்தி உட்பட பகுதிகளில் நேற்று பெட்ரோல் பங்க்குளில் கூட்டம் அதிகரித்தது. வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நின்று கேன், பாட்டில்களில் வாங்கி சென்றனர். பீதியால் அதிகளவில் பெட்ரோல் கொள்முதல் செய்யப்பட்டதால், கவுகாத்தி, கோலாகாட், நாகான், தாரங் போன்ற மாவட்டங்களில் பல பம்புகள் ‘எரிபொருள் இல்லை’ என்ற அறிவிப்புடன் மூடப்பட்டன. இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் ரவி கோட்டா கூறுகையில், ‘மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. தீங்கிழைக்கும் சக்திகளே பீதியை தூண்டுகிறது. இருப்பு போதுமானதாக உள்ளது’ என்றார். இதே போன்று கர்நாடகா மாநிலம் பெலகாவி மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களிலும் பெட்ரோல் பங்க்குகளில் இன்று மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

கடந்த 2 நாட்களாக குஜராத்திலும் இதுபோன்று மக்கள் அதிகவில் பங்குகள் முன்பு குவிந்தனர். மாநிலத்தில் வதோதரா, அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் போன்ற நகரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. குக்கர் பாத்திரத்தில் கூட பெட்ரோலை வாங்கி சென்றனர். வதோதராவில் ஒரு பெட்ரோல் பங்க்கில் கூட்ட நெரிசலில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்த விபத்தும் ஏற்பட்டது. ஆனால் எந்தவித பதற்றமும் அடைய வேண்டாம் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலாளர் சுஜாதா சர்மா நிருபர்களிடம் கூறுகையில், அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெயுடன் இயங்கி வருகின்றன. நாட்டில் போதுமான அளவு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. எந்தவித தட்டுப்பாடும் இல்லை. நாடு முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்கள் இயல்பாக இயங்கி வருகின்றன. இந்த விவகாரத்தில் வதந்திகளை நம்ப வேண்டாம். நுகர்வோரை எரிபொருள் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. வதந்திகளை நம்பி சில பகுதிகளில் மக்கள் அவசரப்பட்டு பெட்ரோல், டீசல் வாங்குகின்றனர். அது தேவையில்லை’ என்றார். மேலும், காஸ் சிலிண்டர் விநியோகத்தை பொறுத்தவரையில், புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியாவுக்கு வருவது தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் உள்நாட்டில் தட்டுப்பாடு எதுவும் பதிவாகவில்லை, சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல் தொடர்கிறது’ என்றார்.

Tags : Assam ,Karnataka ,Gujarat ,EU government ,NEW DELHI ,Gulf ,
× RELATED ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணம் செய்ய...