சென்னை: பொதுமக்கள் மருத்துவ காரணத்துக்காக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கையேடு 2026, வெளியீடு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்து, கையேட்டை வெளியிட்டார். இதில் தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைபெற்ற தேர்தல் குறித்தான அனைத்து விவரங்களும் விரிவாக இடம் பெற்றுள்ளது.
இதைதொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் நகர்ப்புறத்தில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. எனவே, நகர்ப்புறத்தில் வாக்குபதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளது. இப்போது வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ரூ.50,000 மேல் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சரியான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும். மருத்துவ காரணங்களுக்காக பணம் எடுத்துச் செல்லும்போது பறக்கும் படையினர் அவற்றை கைப்பற்றுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து மருத்துவ காரணங்களுக்காக ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் ரொக்கமாக கொண்டு செல்லலாம். அதற்கான ஆதாரத்தை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலம் காண்பிக்க வேண்டும். பொதுமக்கள் இயல்பாக கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது.
சமூக வலைதளங்களில் பிரசாரம், வெறுப்பு பேச்சு போன்றவை சைபர் காவல் துறையின் மூலம் கண்காணிக்க பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் இருந்து கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் குறித்து இணையதளம் மற்றும் கடிதம் வாயிலாக புகார் ஏதேனும் அளித்தால் அதில் அவர்கள் கையொப்பமிட்டு புகார் தெரிவிக்க வேண்டும். தற்போது வரை வந்து இருக்க கூடிய மனுக்கள் கையொப்பம் இல்லாமல் வந்து உள்ளது. ஒரே வேட்பாளர் பெயரில் நிறைய பேர் வேட்பு மனு செய்து போட்டியிடக்கூடிய சூழல் உள்ளதாகவும் தேர்தலில் ஒரே பெயரில் மற்றவர்கள் போட்டியிடக் கூடாது என்று சொல்ல முடியாது. அதனால்தான் வேட்பாளரின் புகைப்படத்துடன் கூடிய பேலட் பேப்பர் தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
